ஜெர்லுன், 01 நவம்பர் (பெர்னாமா) -- ஜெர்லுன்னில் உள்ள கம்போங் பிடா 3இல் சரமாரியாக வெட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டதனால் ஆடவர் ஒருவர் மரணமடைந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நேற்றிரவு நிகழ்ந்த இச்சம்பவத்தில் 45 வயதுடைய அவ்வாடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 38 வயதுடைய அவரின் மைத்துனரே இக்கொடூரச் செயலைப் புரிந்ததாக நம்பப்படுகிறது.
இரு ஆடவர்களிடையே நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் பொதுமக்களிடமிருந்து இரவு மணி 7.05க்கு தங்கள் தரப்பு புகார் பெற்றதாகக் குபாங் பாசு மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் முஹமட் ரட்சி அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
''சம்பவ இடத்தைப் போலீசார் வந்தடைந்தபோது தமது வீட்டில் கத்தியுடன் இருந்த சந்தேக நபரைக் கைது செய்தனர். சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அருகிலுள்ள நெல் வயலில் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டோம். கத்தி 30 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. அந்த நேரத்தில் கத்தியுடன் காணப்பட்ட சந்தேக நபரைப் போலீசார் சமாதானப்படுத்தியதை அடுத்து இரவு மணி எட்டு அளவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்," என்று சுப்ரிடெண்டன் முஹமட் ரட்சி அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
சந்தேக நபரின் வீட்டிலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சந்தேக நபர் தமது வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் மரணமடைந்த அவ்வாடவர் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வந்தார்.
பிரேத பரிசோதனைக்காக உயிரிழந்தவரின் உடல் அலோர் ஸ்டார், சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட வேளையில் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)