உலகம்

வங்களாதேசத் தலைநகரில் பேரணி; பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

06/09/2024 07:24 PM

டாக்கா, 06 செப்டம்பர் (பெர்னாமா) --  அரசாங்க வேலைகளுக்கான ஒதுக்கீட்டு முறையை நிறுத்தக் கோரி கடந்த மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி ஒரு மாதம் நிறைவடைந்ததை முன்னிட்டு, அந்நாட்டின் தலைநகரான டாக்காவில் நடத்தப்பட்ட பேரணியில் ஆயிரக் கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

பல வாரங்களாக நீடித்த அவ்வன்முறையில் மாணவர்கள் உட்பட 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஹசீனா இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.

தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கிய முதன்மை எதிர்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்ததைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதத்தில் நான்காவது முறையாக பதவியேற்ற நாட்டின் மிக நீண்டகால பிரதமரின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு இப்போராட்டம் முற்றுப்புள்ளி வைத்தது.

ஷஹீத் பேரணி அல்லது 'தியாகிகளுக்கான ஊர்வலம்' என்ற பாணியில் டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கி வீதிகள் வழியாக அவர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

அங்கு அதிகமானோர் வங்காளதேசத்தின் கொடியை ஏந்தியிருந்த வேளையில், சில பங்கேற்பாளர்கள் இராட்சத பாலஸ்தீனக் கொடியையும் ஏந்தியிருந்தனர்.

17 கோடி மக்கள் வாழும் அதிகமான இஸ்லாமியர்களைக் கொண்ட வங்காளதேசத்திலிருந்து நாடு தழுவிய அளவிலிருந்து பல்லாயிரக் கணக்கானோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)