பொது

73 கிலோ கிராம் எடையிலான போதைப்பொருளை கடத்தும் நடவடிக்கை முறியடிப்பு

11/09/2024 05:27 PM

பாடாங் பெசார், 11 செப்டம்பர் (பெர்னாமா) -- இம்மாத தொடக்கத்தில் சீன தேநீர் பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான 73 கிலோ கிராம் எடை கொண்ட ஷாபு வகை போதைப்பொருளை கடத்தும் நடவடிக்கையை பெர்லிஸ் அரச மலேசிய சுங்கத் துறை, ஜேகேடிஎம் முறியடித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி காலை மணி 8.15-க்கு பாடாங் பெசார், குடிநுழைவு, சுங்க, தனிமைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு கட்டிட வளாகத்தில் தாய்லாந்து பதிவு எண் கொண்ட வாகனத்தை சோதனையிட்டபோது அப்போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக பெர்லிஸ் சுங்கத்துறை இயக்குநர் இஸ்மாயில் ஹஷிம் தெரிவித்தார்.

''சோதனையின் முடிவில் காரின் பின்புறத்தில் பயணிகள் இருக்கையின் இரண்டாவது வரிசையில் கீழ் ஒரு சிறப்பு பெட்டியில் "குவான்யின்வாங்" என்று எழுதப்பட்ட 56 சீன தேநீர் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்புறத்தில் பயணிகள் இருக்கையின் முன் வரிசையில் மாற்றியமைக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு சிறப்பு பெட்டியில் 14 கருப்பு பொட்டலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன,'' என்றார் அவர்.

தாய்லாந்து ஆடவர் என்று சந்தேகிக்கப்படும் வாகன ஓட்டுநர் தலைமறைவாகி விட்டதாக செய்தியாளர்கள் சந்திப்பில் இஸ்மாயில் ஹஷிம் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளை ஏழு லட்சத்து 30 ஆயிரம் போதைப் பித்தர்கள் பயன்படுத்த முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வழக்கு 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் செக்‌ஷன் 39B-இன் கீழ் விசாரிக்கப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)