பொது

4 சிறுமிகளை துன்புறுத்தியதாக பதின்ம வயது பெண் மீது குற்றப்பதிவு

12/09/2024 08:07 PM

சிரம்பான் , 12 செப்டம்பர் (பெர்னாமா) -- கடந்த மாதம் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்றில் ஐந்திலிருந்து ஆறு வயதிற்குட்பட்ட நான்கு சிறுமிகளை துன்புறுத்தியதாக, 19 வயது இளம் பெண் ஒருவர் இன்று சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

நீதிபதிகள் டத்தின் சுரியாத்தி புடின் மற்றும் மியோர் சுலைமான் அஹ்மட் தர்மீசி முன்னிலையில் வாசிக்கப்பட்ட அந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் அந்தப் பதின்ம வயது பெண் மறுத்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மாதத்தில், இரும்புக் கரண்டியை நெருப்பில் இட்டு, அச்சிறுமிகளின் கைகளில் தீக்காயங்களை ஏற்படுத்தியதாக, பராமரிப்பு மையத்தின் உதவிப் பணியாளரான அப்பெண் மீது நான்கு குற்றங்கள் பதிவாகியுள்ளன.

2001-ஆம் ஆண்டு சிறார்கள் சட்டம் செக்ஷன் 31(1)(a)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படும் நிலையில், அதேச் சட்டம் செக்ஷன் 31 (1)-இன் கீழ் தண்டனை விதிக்கப்படலாம்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் அதிகபட்சம் 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது அவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.

இரு குற்றச்சாட்டுகளுக்கு 40,000 ரிங்கிட் ஜாமின் தொகை விதித்த நீதிபதி டத்தின் சுரிதா, அப்பெண் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு, கடப்பிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.

இவ்வழக்கின் அடுத்த செவிமடுப்பு அக்டோபர் 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)