பொது

சிறார் வன்கொடுமை; சந்தேகிக்கப்படும் நிறுவனம் மீதான விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும்

13/09/2024 07:38 PM

காஜாங், 13 செப்டம்பர் (பெர்னாமா) --  GISBH எனப்படும் Global Ikhwan Service and Business குழும நிறுவனம் தொடர்பிலான விசாரணைகளும் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

அதிகார, மத துஷ்பிரயோகத்துடன், சிறார் வன்கொடுமையையும் அவ்விவகாரம் உட்படுத்தியுள்ளதால் அத்தகைய நடவடிக்கை மிகவும் அவசியமானது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

''உண்மை என்ன என்பதை ஆராய்ந்து பார்ப்போம். மக்களின் மத நம்பிக்கை சார்ந்த இவ்விவகாரம் பெரியது. அதிகார, மத துஷ்பிரயோகம், சிறார் வன்கொடுமை, அவை அனைத்தும் கடுமையான விவகாரங்கள் ஆகும். நடவடிக்கை எடுப்பதில் ஏன் தாமதம் என்று மக்களும் பல தரப்பினரும் கேட்கிறார்கள். ஆகவே, இவ்விவகாரத்தை உடனடியாக விசாரணை செய்து அறிக்கை வெளியிடுவதோடு, தகுந்த நடவடிக்கையும் எடுக்கும்படி நான் கூறியிருக்கிறேன்'', என்று அவர் கூறினார்.

இன்று காஜாங் டேசா புத்ராவில் உள்ள ஏஐ இமான் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் அவ்வாறு கூறினார்.

இவ்விவகாரத்தில் விசாரணை மற்றும் கல்வியில், குறிப்பாக சம்பந்தப்பட்ட பிரச்சனை தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதில் ஜாக்கிம் சக்தி வாய்ந்தது என்றும் பிரதமர் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)