பொது

சிறார் மீட்கப்பட்ட விவகாரம்; நடவடிக்கை முன்னர் போலீஸ் விரிவான விசாரணை

13/09/2024 08:05 PM

ஜாலான் செமாராக், 13 செப்டம்பர் (பெர்னாமா) --  இதனிடையே, மதத்தையும் சிறார்களையும் சுயநலத்திற்காக தவறான முறையில் பயன்படுத்திய, GISBH நிறுவனம் மீதான நடவடிக்கை தாமதமாக மேற்கொள்ளப்பட்டதாக எழுந்திருக்கும் கூற்றை, அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் மறுத்திருக்கிறது.

நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், முதலில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக, அதன் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் விளக்கினார்.

''இது ஒரு தொடர் நடவடிக்கை. பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டில் தாமதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது சரியில்லை. தற்போதுள்ள வாக்குமூலங்களின் அடிப்படையில் செயல்பட்டுள்ளோம். ஆகவே பழைய கதைகளைக் கொண்டு வரத் தேவையில்லை'', என்று அவர் கூறினார்.

பி.டி.ஆர்.எம்-இன் மூத்த அதிகாரிகளுடன் அந்நிறுவனத்தின் நிர்வாகத்தினர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனம் போலீஸ் அதிகாரிகளால் பாதுகாக்கப்படுவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.

''என்னிடமும் புகைப்படம் உள்ளது. புகைப்படம் மட்டுமே. அதனால் நான் GISB நிறுவனத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்று அர்த்தம் ஆகுமா?'', என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)