பொது

சுயநலத்திற்காக நடத்தப்பட்ட மேலும் 39 தொண்டு இல்லங்களை போலீஸ் அடையாளம் கண்டது

14/09/2024 06:58 PM

கோலாலம்பூர், 14 செப்டம்பர் (பெர்னாமா) --  மதத்தையும் சிறார்களையும் சுயநலத்திற்காக பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நிறுவனம் ஒன்று நடத்திய, மேலும் 39 தொண்டு இல்லங்களை, அரச மலேசிய போலீஸ் படை அடையாளம் கண்டுள்ளது.

கடந்த புதன்கிழமை 20 தொண்டு இல்லங்களில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து, பல மாநிலங்களில் உள்ள மேலும் 39 தொண்டு இல்லங்களில் சோதனை நடத்துவதற்கான சாத்தியத்தை தங்கள் தரப்பு மறுக்கவில்லை என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாரூடின் ஹுசேன் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், சிலாங்கூரில் உள்ள 18 இல்லங்களிலும் நெகிரி செம்பிலானில் உள்ள இரு இல்லங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 402 குழந்தைகள் உட்பட பதின்ம வயதினர் காப்பாற்றப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களில் மாற்றுத் திறனாளிகள் என அடையாளம் காணப்பட்ட 10 பேர் உட்பட 5 வயதுக்கு கீழ் உள்ள 49 குழந்தைகள் சமூக நலத் துறையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 159 பாதுகாவலர்கள், குழந்தை பராமரிப்பாளர்கள் மற்றும் தொண்டு இல்லத்தின் நிர்வகிப்பாளர்களைச் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் நான்கு முதல் ஏழு நாட்களுக்குத் தடுப்பு காவலில் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சிறார்களின் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்,13 பேர் முறையற்ற பாலியல் உறவுக்கு உட்படுத்தப் பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதாக, ரசாரூடின் நேற்று தெரிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)