பொது

தொண்டு இல்லங்களை நடத்திய நிறுவனத்திற்கும் பாஸ் கட்சிக்கும் தொடர்பில்லை - ஹடி அவாங்

14/09/2024 07:14 PM

தெமர்லோ, 14 செப்டம்பர் (பெர்னாமா) --  சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள 20 தொண்டு இல்லங்களில், மதத்தையும் சிறார்களையும் சுயநலத்திற்காக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்துடன் பாஸ் கட்சிக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை, அக்கட்சி மறுத்துள்ளது.

அந்நிறுவனத்துடன் பாஸ் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக அனைத்துலக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தாலும், எந்தவொரு பாஸ் உறுப்பினரும் அதில் ஈடுபடாததால், அக்கூற்று உண்மையற்றது என்று அதன் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் தெரிவித்தார்.

''சில அனைத்துலக ஊடகங்கள் தொடர்புப்படுத்தி இருந்தாலும் எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அது ஓர் உண்மையற்ற செய்தி. தவறானது. எங்களின் உறுப்பினர்கள் அதில் இல்லை. எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை'', என்று அவர் கூறினார்.

இன்று, பகாங், தெமர்லோவில் பாஸ் கட்சியின் 70-வது பொதுப் பேரவையில் உரையாற்றியப் பின்னர் ஹடி அவாங் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதனிடையே, தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள மதத்தை பயன்படுத்திய அந்நிறுவனம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, சம்பந்தப்பட்ட அவ்விவகாரம் தொடர்பிலான மேல் விசாரணையை மேற்கொள்ள போலீசிடமே தாம் விட்டுவிடுவதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)