கோலாலம்பூர், 30 அக்டோபர் (பெர்னாமா) -- நாடு தழுவிய அளவிலான இந்தியர்களின் வளர்ச்சி மற்றும் அவர்களுக்கான மேம்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கும் வகையில் இந்திய உருமாற்றப் பிரிவு மித்ரா மற்றும் இந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று ஒரு சிறப்பு சந்திப்புக் கூட்டத்தை நடத்தினார்.
மித்ரா மூலமாக நாட்டிலுள்ள இந்தியர்களை மேம்படுத்துவதற்கான வியூக முயற்சிகளை தொடர்ந்து வலுப்படுத்த, அரசாங்கம் உறுதி கொண்டுள்ளதையும் அச்சந்திப்பின் மூலமாக பிரதமர் வலியுறுத்தினார்.
இந்திய சமூகத்தின் வணிக நிதியுதவி உட்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் நோக்கில், அண்மையில் தாம் தாக்கல் செய்திருந்த 2025ஆம் ஆண்டுகான வரவு செலவுத் திட்டத்தில் தாம் அறிவித்த நிதி ஒதுக்கீடும் இதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
எனவே, இந்த நிதி ஒதுக்கீடு, அதன் இலக்குகளை அடையும் வகையில் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில், உருமாற்றத் திட்டங்களை ஒருங்கிணைத்து, செயல்பாடுகளை அதிகரிக்குமாறு அவர் அமைச்சுக்கும் உத்தரவிட்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.
இந்தியத் தலைவர்களின் ஆதரவுடன் மித்ராவை மேலும் வலுப்படுத்துவதன் வாயிலாக, நாட்டிலுள்ள இந்திய சமூகத்திற்கான மேம்பாடு, தூரநோக்கு வரைவுகள் அனைத்தும் சிறப்பான முறையும் ஈடேறும் என்றும் பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)