கோத்தா பாரு, 03 நவம்பர் (பெர்னாமா) -- சுங்கை கோலோகிற்கு அருகிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் தாய்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட கிளாந்தானைச் சேர்ந்த பெண் பாடகி உட்பட அறுவரின் தடுப்புக் காவலுக்கான உத்தரவு, நாளை தாய்லாந்து நாரதிவாட் நீதிமன்றத்தில் பெறப்படும்.
கைது செய்யப்பட்டவர்கள் தங்கியிருந்த விடுதி அறையிலிருந்து சுமார் ஆறாயிரம் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் தாய்லாந்து போலீஸ் மேல் விசாரணையை மேற்கொள்ள அத்தடுப்புக் காவல் உத்தரவு பெறப்படவுள்ளதாக தாய்லாந்து போலீஸ் தெரிவித்துள்ளது.
இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியைத் தொடர்பு கொண்ட போது கைது செய்யப்பட்ட 25 முதல் 34 வயதுடைய அவர்கள் அனைவரும் நாளை காலை மணி 10க்கு நாரதிவாட் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை மணி 6க்கு சுங்கை கோலோக் அருகில் இருக்கும் ஒரு தங்கும் விடுதியில் தாய்லாந்து போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில், கிளாந்தானைச் சேர்ந்த ஓர் உள்நாட்டு பாடகி உட்பட ஆறு மலேசியர்கள் கைது செய்யப்பட்டத்தை சனிக்கிழமை, கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமட் உறுதிப்படுத்தினார்.
அறையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், போதை மாத்திரைகள் என்று நம்பப்படும் சுமார் 6,000 மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும், மேல் விசாரணைக்காக சுங்கை கோலோக் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இருவர், பாசிர் மாஸ், ரந்தாவ் பஞ்சாங் அருகிலுள்ள கள்ளப் பாதையைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக தாய்லாந்திற்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.
மற்ற நால்வர் ரந்தாவ் பஞ்சாங்கின் குடிநுழைவுத்துறை, சுங்கத்துறை, தனிமைப்படுத்தும் மையம் மற்றும் பாதுகாப்பு வளாகம் ஆகியவற்றின் வழியாக அங்குச் சென்றுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)