பொது

17 வயது மாணவன் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு

04/11/2024 05:43 PM

ஈப்போ, 04 நவம்பர் (பெர்னாமா) -- தற்காப்பு தரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணத்தினால், ஐந்தாம் படிவ மாணவன் ஒருவன் ஓட்டிய மோட்டார் சைக்கிளை மோதி அவனுக்கு மரணத்தை விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரின் வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இம்மாற்றம் குறித்து இன்றுதான் தெரிவிக்கப்பட்டதால், உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ பூபிந்தர் சிங் குச்சரன் சிங் ப்ரீத் வழக்கை ஒத்திவைக்க அனுமதியளித்தார்.

கடந்தாண்டு டிசம்பர் 15-ஆம் தேதி, நண்பகல் மணி 12.05-இல் இருந்து 12.40-க்குள், Jati இடைநிலைப் பள்ளிக்கு அருகே 17 வயதான முகமட் ஜஹாரிஃப் அஃபெண்டி முகமட் ஜம்ரிக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக டிஎஸ்பி பதவிக்கொண்ட 44 வயது முகமட் நஸ்ரி அப்துல் ரசாக் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை அல்லது குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் அல்லது அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

மரணத் தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில் குறைந்த பட்சம் 12 பிரம்படிகள் விதிக்கப்படும்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கும்படி அவரை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்களில் ஒருவரான முகமட் நஸ்ரி கடந்த செப்டம்பர் ஐந்தாம் தேதி செய்த விண்ணப்பத்தை நீதிபதி பூபிந்தர் சிங் மறுத்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கான எவ்வித சூழலும் இல்லை என்பதையும் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)