பொது

பினாங்கு நகரத்தார் ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலய கும்பாபிஷேகம்

14/11/2024 08:33 PM

ஜார்ஜ்டவுன், 14 நவம்பர் (பெர்னாமா) -- பினாங்கு, ஜாலான் கெபுன் பூங்காவில் அமைந்துள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் சுமார் பத்தாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1854-ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் இதுவரை ஏழு முறை கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் எட்டாவது முறையாக இன்று காலை மணி 9.45 அளவில் கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதாக ஆலய அறங்காவலர் டாக்டர் எஸ்.ஏ. நாராயணன் தெரிவித்தார்.

''ஒரு வாரம் முன்னதாகவே பூஜைகள் தொடக்கம் கண்டன. இன்று காலை யாகசாலை பூஜையிலிருந்து தொடங்கி குறிப்பிட்ட நேரத்தில் கும்பம் மேலே எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக செய்யப்பட்டது. முருகப் பெருமானுக்கு ஆகம முறைப்படி அனைத்து பூஜைகளும் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 குருக்கள்மார்கள் வந்திருந்தனர். அவர்களில் அறுபடை வீட்டைச் சேர்ந்த ஆறு முக்கிய குருக்களும் வந்திருந்தனர்,'' என்றார் அவர்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு, பிள்ளையார்பட்டி ஆலய சிவாச்சாரியார் சிவ ஶ்ரீ பிச்சை குருக்களின் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இன்றோடு கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் பூர்த்தியடைந்தாலும், நாளை தொடங்கி 48 நாள்களுக்கு மண்டாலாபிஷேகம் நடைபெறும் என்ற தகவலையும் டாக்டர் நாரயணன் பகிர்ந்துகொண்டார்.

''அடுத்தாண்டு ஜனவரி முதலாம் தேதி மண்டலாபிஷேகம் பூர்த்தியடையும். இது உபயத்தாரர்களால் நடத்தப்படும். அனைவருக்கும் அன்னதானம் உண்டு,'' என்றார் அவர்.

நகரத்தார் ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலய குடமுழுக்கு விழா குறித்து பெர்னாமா தமிழ்ச் செய்தி பிரிவுத் தொடர்புகொண்டபோது டாக்டர் நாராயணன் அத்தகவல்களை வழங்கினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]