பொது

28 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

15/11/2024 04:52 PM

கோலாலம்பூர், 15 நவம்பர் (பெர்னாமா) -- குவா முசாங்கில் கடந்த இரு நாள்களாக மேற்கொள்ளப்பட்டு நேற்று நிறைவடைந்த சோதனை நடவடிக்கையில் சட்டவிரோதக் குடியேறிகளான 28 ஆடவர்களை கிளந்தான் மாநில மலேசிய குடிநுழைவுத் துறை, JIM கைது செய்துள்ளது.

18 இந்தோனேசியர்கள், ஏழு வங்காளதேசிகள் மற்றும் மியான்மாரை சேர்ந்த மூவரும் கைது செய்யப்பட்டதாக மாநில JIM-இன் நிர்வாகப் பிரிவுத் துணை இயக்குநர் நிக் அக்தருல்ஹாக் நிக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

கிளாந்தான், JIM-இன் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த 20 அதிகாரிகள், குவா மூசாஙின் கம்போங் ஜெரேக் பெர்தாம், லாடாங் பிலாவ் மற்றும் மெராந்தோ ஆகிய பகுதிகளில் உள்ள சில கடைகளில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

1959/63-ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம் செக்ஷன் 6 (1)(c)-இன் கீழ் அடுத்தக்கட்ட விசாரணையை மேற்கொள்ளும் வகையில், அவர்கள் அனைவரும் தானா மெராவில் உள்ள குடிநுழைவுத் துறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கிளந்தான் JIM தெரிவித்தது.

இதனிடையே, அந்நிய நாட்டவர் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அறிந்தால், உடனே முன்வந்து தகவல் அளிக்குமாறும் நிக் அக்தருல்ஹாக் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)