பொது

'சிண்டாய்' சிறுகதை தொகுப்பின் மூலம் நூலாசிரியராக அறிமுகம் காணும் அரவின் குமார்

15/11/2024 04:57 PM

கோலாலம்பூர், 15 நவம்பர் (பெர்னாமா) --   சமூகத்தின் அநீதிகளைத் எழுத்துகளால் வெளிச்சம் போட்டு காட்டும் வல்லமை எழுத்தாளர்களுக்கு உண்டு.

குறிப்பாக மக்களுக்குக் கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட அநீதிகளையும், அவர்களின் நிகழ்கால தேவைகளையும், சொல் திறனால் கிஞ்சிற்றும் மிகைப்படுத்தாமல் அப்படியே வெளிப்படுத்தும் பெருமை மலேசிய தமிழ் எழுத்தாளர்களையும் சாரும்.

அந்த வரிசையில், இளம் எழுத்தாளராகி 'சிண்டாய்' எனும் சிறுகதை தொகுப்பின் மூலம் நூலாசிரியராக அறிமுகம் காண்கின்றார் அரவின் குமார் ஜெயசங்கர்.

சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதுவது, மலாய் மொழியில் உள்ள சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்வது, தமிழ்விக்கி எனும் கலைகளஞ்சியத்தில் கட்டுரைகள் எழுதுவது போன்ற துறைகளில் தமது இலக்கிய ஆர்வத்தை வெளிப்படுத்தி வரும் அரவின் குமார்,

முதல்முறையாக, 10 சிறுகதைகள் அடங்கிய 'சிண்டாய்' எனும் சிறுகதை தொகுப்பு நூலை வெளியீடு செய்யவுள்ளார்.

மலேசியாவின் புகழ்பெற்ற பாடகி சித்தி நூர் ஹாலிசாவின் 'சிண்டாய்' எனும் பாடலைப் பின்னனியாகக் கொண்ட கதையும் தொகுப்பில் இருப்பதால், இந்நூலுக்கு 'சிண்டாய்' என பெயரிடப்பட்டிருப்பதாக, பெர்னாமாவின் கலை சங்கமம் அங்கத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது அரவின் குமார் கூறினார்.

மலேசியத் தமிழ் சூழலில் அதிகம் பேசப்படாத பெருநகர வாழ்வின் நெருக்கடி, விளிம்பு நிலை மக்களின் வாழ்வு, பல்லின சூழல் ஆகியவற்றை பின்னணியாகக் கொண்டு இச்சிறுகதை தொகுப்பு நூல் எழுதப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இலக்கிய பயணத்தின் போது தமக்கு கிடைத்த விமர்சனங்களை ஆக்கப்பூர்வமான விமர்சனங்களாக மட்டுமே பார்த்ததாக கூறுகின்றார், கோலாலம்பூர், சுல்தான் ஹிஷாமுடின் அலாம் ஷா  தேசியப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் 29 வயதுடைய அர்வின் குமார்.

''ஒப்பீடுகளின் அடிப்படையில் அதனுடைய தரம் குறித்து விமர்சனங்கள் எழுவது மிகவும் இயல்பான ஒன்று. அதுபோல என்னுடைய எழுத்துகளின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் சில குறைப்பாடுகள் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால், நான் எந்த வகையிலும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. அதை ஓர் ஆக்கப்பூர்வமான விமர்சனமாக தான் நான் எடுத்துக் கொள்கிறேன். எவ்வாறு எழுத்து துறையை மேம்படுத்தி கொள்வது என்று தான் நினைக்கிறேன்'', என்றார் அவர்.

அதோடு, தற்போது இலக்கிய துறையில் இளைஞர்கள் கொண்டிருக்கும் ஆர்வம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அரவின் இவ்வாறு விளக்கினார்.

''குறைந்திருக்கின்றது என்றால், அது எந்த அர்த்ததில் நான் சொல்கிறேன் என்றால் ஒரு இலக்கில்லாத வாசிப்பு அவர்கள் மத்தியில் இருக்கின்றது. முகநூல், புலனம், டிக்டாக், கீச்சகம் போன்ற சமூக ஊடகங்களில் நிறைய துணுக்குச் செய்திகள், இரண்டு அல்லது மூன்று வரி செய்திகள் இருக்கும். அந்த வாசிப்பு பெருகி இருக்கின்றது. ஆனால், இலக்குடன் இருக்கக் கூடிய வாசிப்புகள். நேரத்தை வகுத்து கவனத்தை ஈர்த்து இருக்கக் கூடிய வாசிப்புகள் குறைந்திருக்கின்றது. அதன் அடிப்படையில் தான் குறைந்திருக்கிறது என்று கூறினேன்'', என்று அவர் கூறினார்.

அதோடு, அடுத்த மாதம் டிசம்பர் முதலாம் தேதி, வல்லினம் இலக்கிய குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் தமக்கு வழங்கப்படும் இளம் எழுத்தாளர் விருது குறித்தும் அவர் பேசினார்.

''2024-ஆம் ஆண்டு இந்த விருதிற்கு நான் தேர்வு பெற்றிருக்கின்றேன். இந்த விருதினுடைய நோக்கம் என்னவென்றால் எழுத்து துறையில் மென்மேலும் சிறந்த படைப்புகளை வழங்க வேண்டும், தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று ஊக்குவிக்கும் நோக்கத்தில் வல்லின அமைப்பு கொடுக்கின்றனர். வல்லின அமைப்பு மலேசியாவில் இலக்கியத்தில் ஈடுபடுகின்ற அமைப்புகளில் மிகவும் தீவிரமான ஒரு அமைப்பு. பல முக்கியமான நிகழ்வுகளைச் செய்து கொண்டு வருகின்றனர். அவர்களின் முன்னெடுப்பில் இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் நடைபெறுகிறது. புத்தக வெளியீடு விழா மற்றும் இளம் எழுத்தாளர் விருது விழா'', என்று அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் உள்ள YMCA மண்டபத்தில் மதியம் 2 முதல் 5 மணி வரை நடைபெறவிருக்கும், இவ்விழா குறித்த மேல் விபரங்களைத் தெரிந்து கொள்ள திரையில் காணும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)