பொது

G-20 மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

17/11/2024 04:30 PM

ரியோ டி ஜெனிரோ, 17 நவம்பர் (பெர்னாமா) --   பெரு லிமாவிலிருந்து தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேசிலுக்கு அதிகாரப்பூர்வமாக வந்தடைந்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் அழைப்பை ஏற்று ஜி20 மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

பிரதமரை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம், மலேசிய நேரப்படி இன்று காலை 9.24 மணிக்கு கெலியோ ரியோ டி ஜெனிரோ விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.

பிரதமரை, கெலியோ விமானப்படையின் பிரதிநிதிகளான துணைத் தளபதி லெப்டனன்ட் கொலொனல் புச் இதமாரட்டியும் பிரேசில் வெளியுறவு அமைச்சர் ஆர்லாண்டோ டிம்போனியும் மரியாதை அணிவகுப்புடன் வரவேற்றனர்.

அவர்களுடன் பிரேசிலுக்கான மலேசியத் தூதர் குளோரியா டிவெட், மலேசியத் தூதரகத்தின் முதலாவது செயலாளர் முஹமட் முஹைமின் அஸ்மி, மலேசியத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் அன்வார் உமார் ருஸ்ஸாமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிதியமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வாருடன், வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசானும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ தெங்கு சஃரூல் தெங்கு அப்துல் அசிஸ் உட்பட இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹுவாங் தியோங் சீ, எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற துணை அமைச்சர் அக்மால் நஸ்ரூல்லா முஹமட் நசிர், மலேசிய மூத்த அரசாங்க அதிகாரிகள் ஆகியோரும் பிரேசிலுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஜி20-இல்,19 நாடுகளான, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மன், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி,ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து,அமெரிக்காவுடன் ஐரோப்பா ஒன்றியமும் ஆப்பிரிக்க ஒன்றியமும் உள்ளன.

கூட்டு நலன் கொண்ட இருவழி மற்றும் பலதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்க,  ஜி20 நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் சந்திக்க உள்ளார்.

அதோடு, பிரேசில் அதிபரைச் சந்தித்து, வர்த்தகம் மற்றும் முதலீடு, மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு தொழில்துறை உட்பட இருவழி ஒத்துழைப்பு தொடர்பாகவும் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவையும் வலுப்படுத்துவது குறித்தும் அவர் விவாதிக்க உள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)