கோலாலம்பூர், 22 நவம்பர் (பெர்னாமா) -- அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம் உறுப்பினர்களிடையே நேர்மையையும் சிறந்த நிர்வாகத்தையும் ஊக்குவிக்கு பொருட்டு, ஜி.ஐ.பி.எஸ் எனப்படும் நேர்மை மற்றும் தர இணக்கத்துறை, துடிப்புடன் செயல்பட வேண்டும் என தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் அறிவுறுத்தினார்.
வேலை நேரங்களின் போது, பிடிஆர்எம் உறுப்பினர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் பயன்படுத்துவது உட்பட, கண்காணிக்கத் தவறும் மேற்பார்வையாளர்களுக்கு, அரசு அதிகாரி விதிமுறை 3C-ஐ அமல்படுத்துவது போன்ற அம்சங்களும் அதில் அடங்கும் என்று அவர் கூறினார்.
“முனைப்புடன் செயல்பட காத்திருப்பு அவசியமில்லை என்று நான் ஜி.ஐ.பி.-க்கு வலியுறுத்துகிறேன். முன்னதாக ஒரு வழக்கு இருந்தது. இப்பொழுது அது விசாரிக்கப்படுகின்றது, ஜி.ஐ.பி. ஒரு ஆளில்லா விமானத்தைப் பயனபடுத்தி விசாரிக்கின்றனர். அலுவலகத்தை விட்டு வெளியேறும் அதிகாரிகள், வேலை நேரத்தின் போது கோல்ஃப் விளையாடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முறையற்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளை நாங்கள் கைது செய்வோம். கரோக்கே செல்பவர்கள், வெறுமனே சுற்றுவது, தேவைக்கு மீறிய செலவு,'' என்றார் அவர்.
இதனிடையே, நேர்மை உட்பட நல்ல நிர்வாகத்தை பேணிக்காப்பது மற்றும் அனைத்து அரசாங்கக் கொள்கைகளையும் செயல்படுத்த ஆதரவளிப்பது போன்ற இரண்டு அம்சங்களில், பிடிஆர்எம் உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று ரசாருடின் குறிப்பிட்டார்.
இன்று, கோலாலம்பூரில் உள்ள போலீஸ் பயிற்சி மையம் புலாபோலில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டிற்கான போலீஸ் பயிற்சி அணிவகுப்பில் கலந்து கொண்டபோது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)