புத்ராஜெயா, 27 நவம்பர் (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டிற்கான PPSMI எனப்படும் இந்திய சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்ட மானிய விண்ணப்பம் டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 5-ஆம் தேதி வரை திறக்கப்படவுள்ளது.
பயனுள்ள நோக்கத்திற்காக மித்ராவின் நிதியைப் பெறுவதற்கு அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று மித்ராவின் சிறப்பு செயற்குழு தலைவர் பிரபாகரன் பரமேஸ்வரன் கூறினார்.
''2025-க்கு நாங்கள் திறக்கின்றோம். ஆக, விண்ணப்பத்திற்கான அகப்பக்கம் டிசம்பர் 2-ஆம் தேதி, அதாவது இந்த வருடம் திறந்து அடுத்தாண்டு ஜனவரி 5-ஆம் தேதி வரை, ஒரு மாதத்திற்கும் அதிகமான நாட்களுக்கு நாங்கள் இந்த அகப்பக்கத்தை திறந்திருப்போம். இதுதான் சரியான நேரம், அரசு நிறுவனங்கள், நிறுவனங்கள், சமயக் குழுவை சேர்ந்தவர்கள், இளைஞர்கள், பயிற்சி தேவைகள் அனைவரும் மித்ராவின் நிதிக்கு விண்ணப்பம் செய்து கொள்ள'', என்று அவர் கூறினார்.
அதேவேளையில், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட இந்திய நோயாளிகளுக்கு சிகிச்சை வசதிகளை ஏற்படுத்தித் தருவதை நோக்கமாகக் கொண்டு சிறுநீரக சுத்திகரிப்பு உதவித் தொகையும் வசதி குறைந்த உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவி தொகையும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்நிதி இவ்வாண்டின் இறுதிக்குள் வழங்கப்படும் என்று பிரபாகரன் தெளிவுப்படுத்தினார்.
''சீறுநீரக பாதிப்பு மற்றும் மாணவர்களுக்கான உதவி தொகையைக் கூடிய விரையில் இவ்வருடத்திற்குள் முடித்து விடுவோம். பட்டியல் அனைத்தும் அனுப்பி விட்டோம் அதற்கான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றது. யார் தேர்வு பெற்றுள்ளனர் யாரின் விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டுள்ளது போன்ற விவகாரங்களும் அதற்கான மறுவிண்ணப்ப நடவடிக்கைகளும் நடந்து கொண்டிருக்கின்றது. நிதி கண்டிப்பாக இவ்வருடத்திற்குள் சென்றுவிடும்'', என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயா, டமார் சரி 3 மண்டபத்தில் மித்ராவின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)