பொது

மித்ரா நிதியை இந்திய இளைஞர்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும்

01/12/2024 06:34 PM

ஜார்ஜ்டவுன் , 01 டிசம்பர் (பெர்னாமா) -- இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ராவின் கீழ் வழங்கப்படும் அரசாங்க உதவி மற்றும் நிதியை இந்தியர்கள், குறிப்பாக இளைஞர்கள், சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய சமூகத்திற்கும் இளைஞர்களுக்கும் பயனளிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மலேசிய இந்திய இளைஞர் மன்றம் MIYC, முக்கியப் பங்காற்றுவதாக துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் இங் கூறினார்.

"அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பால் மட்டுமே இந்திய சமூகத்திற்குப் பிரகாசமான எதிர்காலம் பிறக்கும் என்று நான் நம்புகிறேன். மித்ரா வியூக பங்காளியாக ஒவ்வொரு முயற்சியும் அதிகபட்ச பயனளிப்பதை உறுதிசெய்ய சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பாலமாக இருக்க முடியும், '' என்றார் அவர்.

இன்று பினாங்கில் நடைபெற்ற MIYC ஆண்டுப் பொது கூட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் லிம் ஹுய் இங் அவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, மித்ராவின் இத்தகைய வாய்ப்புகள் தங்களைப் போன்ற மேலும் பல இளைஞர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள உதவும் என்று இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்கள் சிலர் தெரிவித்தனர்.

மித்ராவின் கீழ் வழங்கப்படும் நிதி வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மித்ராவின் ஆதரவுடன் MIYC போன்ற அமைப்புகள் இளைஞர்கள் மற்றும் சமூகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை ஏற்பாடு செய்வது தங்களின் எதிர்காலத்திற்கு உகந்ததாக உள்ளது என்று தனேஷ் பசில், எம்.விமதன் ஆகியோர் தெரிவித்தனர்.

நாட்டில் இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த 11 திட்டங்களைச் செயல்படுத்துவதில் மித்ரா ஒன்பது கோடியே 54 லட்சத்து 80,000 ரிங்கிட்டை வழங்கியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)