பொது

யூ.பி.என்.எம் பகடிவதை கலாச்சாரத்தை உடனடியாக நிறுத்தும்படி மாமன்னர் உத்தரவு

03/12/2024 04:11 PM

கோலாலம்பூர், 03 டிசம்பர் (பெர்னாமா) -- மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகம்,யூ.பி.என்.எம்-இல் நிகழும் பகடிவதை கலாச்சாரத்தை உடனடியாக நிறுத்தும்படி, மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

ஆரோக்கியமற்ற அக்கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அந்த பல்கலைக்கழகத்தின் நற்பெயரை மீட்டெடுக்க அனைத்து தரப்பினரும் முயற்சிக்க வேண்டும் என்று, யூ.பி.என்.எம்-இன் வேந்தருமான மாமன்னர் வலியுறுத்தினார்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், என் பெயர் இப்பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்படுவதை நான் விரும்பவில்லை. தளபதி மற்றும் கொமெண்டர் ஆகியோரும் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். நம்பிக்கையை இழக்க நேரிட்டால் பதவி விலக வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் ஓர் இராணுவ அதிகாரியாக வேண்டும் என்பதற்காகவே இங்கு அனுப்புகிறார்கள். துன்புறுத்தலுக்கு ஆளாவதற்கு அல்ல என்று நான் நம்புகிறேன்.

இன்று, யூ.பி.என்.எம் வேந்தராக நியமனம் பெற்ற அதிகாரப்பூர்வ சடங்கு உட்பட அப்பல்கலைக்கழத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய மாமன்னர் அவ்வாறு கூறினார்.

இவ்வட்டாரத்தில், தற்காப்பு, இராணுவம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் முன்னோடி பல்கலைக்கழகமாக யூ.பி.என்.எம் திகழ வேண்டும் என்று சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)