பொது

48 ஆயிரத்து 950 கோடி ரிங்கிட் முதலீட்டிற்கு அரசாங்கம் ஒப்புதல்

03/12/2024 04:18 PM

கோலாலம்பூர், 03 டிசம்பர் (பெர்னாமா) --   2023-ஆம் ஆண்டு தொடங்கி 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் தொழிற்துறை, சேவை மற்றும் முதன்மை துறைகளில் மொத்தம் 48 ஆயிரத்து 950 கோடி ரிங்கிட் முதலீட்டிற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதில் 26 ஆயிரத்து 290 கோடி ரிங்கிட் அல்லது 53.7 விழுக்காடு அந்நிய முதலீடு என்றும் 22 ஆயிரத்து 650 கோடி ரிங்கிட் உள்ளூர் முதலீடு என்றும் முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சின் துணை அமைச்சர் லியூ சின் தோங் தெரிவித்தார்.

''பினாங்கு 6500 கோடி ரிங்கிட், கெடா 5400 கோடி ரிங்கிட், கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் 4300 கோடி ரிங்கிட், ஜோகூர் 3800 கோடி ரிங்கிட், மற்றும் சிலாங்கூர் 2900 கோடி ரிங்கி ஆகும்'', என்று அவர் கூறினார்.

இன்று மக்களவையில் இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு தொகை மற்றும் மாநில அடிப்படையிலான முதலீட்டு தொகை குறித்து தம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சோங் சியாங் ஜென் எழுப்பிய கேள்விக்கு லியூ சின் தோங் அவ்வாறு பதிலளித்தார்.

பொருளாதார நடவடிக்கைகள், வர்த்தக வாய்ப்புகள் மற்றும் உயர் மதிப்புள்ள வேலை வாய்ப்புகள் உட்பட நாட்டிற்கும் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் தரமான முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளை முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சு மற்றும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம் வழி அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)