பொது

இணையக் குற்றச்செயல் சட்ட மசோதா அக்டோபரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் - நக்சா

08/01/2025 09:21 PM

கோலாலம்பூர், 8 ஜனவரி (பெர்னாமா) -- தேசிய இணையப் பாதுகாப்பு நிறுவனம், நக்சா  வகுத்து வரும் இணைய குற்றச்செயலுக்கான புதிய சட்ட மசோதா வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் 15ஆவது நாடாளுமன்றத்திற்கான நான்காம் அமர்வின் மூன்றாவது கூட்டத்தில்  தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவீன இணைய அச்சுறுத்தலைக் கையாள்வதில் காலம் கடந்ததாகவும் பொருத்தமற்றதாகவும் கருதப்படும் 1997ஆம் ஆண்டு கணினி குற்றச்செயல் சட்டத்திற்குப் பதிலாக இச்சட்ட மசோதா பரிந்துரைக்கப்பட்டதாக நக்சாவின் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் மெகாட் சுஹாய்ரி மெகாட் தஜுடின் தெரிவித்தார்.

''2024ஆம் ஆண்டுக்கான தேசிய இணைய பாதுகாப்பு செயற்குழு கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் சில வாரங்களுக்கு பிறகு தமது முகநூல் பதிவில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இப்புதிய சட்ட மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். 1997ஆம் ஆண்டு கணினி குற்றச்செயல் சட்டத்தை சரிபார்க்க நாங்கள் விரும்புகிறோம். ஆனால், பழையச் சட்டத்தைச் சரிபார்ப்பதைக் காட்டிலும் புதிய சட்டம் இருந்தால் இன்னும் ஏற்புடையதாக இருக்கும்,'' என்று டாக்டர் மெகாட் சுஹாய்ரி குறிப்பிட்டார்.

நேற்று, 2025 அனைத்துலக ஒழுங்குமுறை மாநாட்டில் 'Regulating for Resilience: Cybersecurity and Critical Infrastructure Protection' என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் பெர்னாமா செய்திகளிடம் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் புடாபெஸ்ட் மாநாட்டிலும் இணைய குற்றச்செயலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பின் மாநாட்டிலும் பங்கேற்க மலேசியாவிற்கு முதன்மை தேவையாக இப்புதியச் சட்டம் விளங்கும் என்று டாக்டர் மெகாட் சுஹாய்ரி கூறினார்.

நாட்டிலும் அனைத்துலக அளவிலும் இணையக் குற்றச்செயலைக் கையாள்வதில் நாட்டின் பங்களிப்பைக் காட்டுவதில் இவ்விரு மாநாடுகளும் அவசியம் என்று அவர் மேலும் விவரித்தார்.

இவ்வாண்டு இறுதிக்குள் 25,000 இணையப் பாதுகாப்பு நிபுணர்களை உருவாக்குவதற்கான பிரதமரின் இலக்கை கோடி காட்டி, இணையப் பாதுகாப்பு நிபுணத்துவத்திற்கான மோசமான பற்றாக்குறையைக் கையாள உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாநாட்டில் நடைபெற்ற மற்றொரு கலந்துரையாடலில் அவர் வலியுறுத்தினார்.

மேலும், அந்நோக்கத்தை அடைவதற்கு உள்நாட்டு நிபுணர்களின் பணியை நீட்டிப்பதற்கான அவசியம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)