கோலாலம்பூர், 01 மார்ச் (பெர்னாமா) -- கடந்த புதன்கிழமை கோலாலம்பூரில் உள்ள ஒரு பேரங்காடியில் சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்ற குத்துச்சண்டை போட்டியின் போது கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 17 முதல் 28 வயதுடைய அவர்கள் அனைவரும் அன்றைய தினத்தில் நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியின் ஆதரவாளர்கள் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் படைத் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து புதன்கிழமை நள்ளிரவு மணி 12.45-க்குப் போலீசுக்குக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டதாக ஏசிபி சுலிஸ்மி கூறினார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 147-இன் கீழ் விசாரணைக்கு உதவும் பொருட்டு, கடந்த வியாழக்கிழமைவரை இரண்டு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் போலீசாரின் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.
மேல் நடவடிக்கைகாக, அவர்கள் மீதான விசாரணை அறிக்கை, கோலாலம்பூர் அரசு தரப்பு துணை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)