உலகம்

இரு பேருந்துகள் விபத்து; 37 பேர் பலி

02/03/2025 07:26 PM

பொலிவியா, 02 மார்ச் (பெர்னாமா) -- தென்மேற்கு பொலிவியாவில் புறநகர் சாலையில் சனிக்கிழமை அதிகாலை இரு பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 37 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 39 பேர் காயமடைந்துள்ளனர்.

உயுனி பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் அந்நாட்டு நேரப்படி காலை மணி ஏழுக்கு இவ்விபத்து நிகழ்ந்தது.

அதில் ஒரு பேருந்து, லத்தின் அமெரிக்காவில் தற்போது மிக முக்கியமான விழா நடைபெற்று வரும் ஒருரோ பகுதியை நோக்கி பயணித்தது.

விபத்தில் காயமடைந்தவர்களில் சிலர் இடிபாடுகளில் மாட்டிக் கொண்டதால், அவர்களைக் காப்பாற்றுவதில் சிரமத்தை எதிர்நோக்கியதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேருந்துகளின் ஓட்டுநர்கள் உட்பட காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிவியாவின் மலைப்பாங்கான, பராமரிக்கப்படாத மற்றும் மேற்பார்வை குறைவாக உள்ள சாலைகள் உலகிலேயே மிகவும் ஆபத்தான சாலைகளில் அடங்கும்.

அந்நாட்டில், ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 1,400 இறப்புகள் பதிவு செய்யப்படுகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)