சிறப்புச் செய்தி

மூவின எழுத்தாளர்களையும் ஒன்றிணைக்கும் 'முக்கோண கதைகள்'

08/05/2025 05:17 PM

கோலாலம்பூர், 08 மே (பெர்னாமா) -- மொழியை புரிந்துகொள்வது மட்டுமின்றி மொழியின் வழியாக எழுதக்கூடிய இலக்கியங்களும் இன ஒற்றுமைக்கு பங்களிக்கின்றன.

அதனை கருத்தில் கொண்டே,  நாட்டில் உள்ள மூவின எழுத்தாளர்களையும் தங்களின் படைப்புகள் மூலம் ஒன்றிணைக்கும் முயற்சியை வல்லின இலக்கிய குழு ஏற்பாடு செய்துள்ளது.

அதன் வழி 'முக்கோண கதைகள்' எனும் நிகழ்ச்சியில் மூன்று மொழிப்பெயர்ப்பு நூல்களையும் வல்லினம் வெளியீடு செய்கின்றது,

ஜூன் முதலாம் தேதி கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்சில் உள்ள YMCA மண்டபத்தில் 'முக்கோண கதைகள்' நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

வல்லினமும் -  PEN MALAYSIA எனப்படும் பன்மொழி எழுத்தாளர்கள் அமைப்பும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துவதாக அதன் ஏற்பாட்டுக் குழு தலைவர் ம.நவீன் தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே, தமிழகம் மற்றும் பிற இலக்கியங்களையும் வாசிக்கக்கூடிய மலேசிய வாசகர்களுக்கு மொழி பெயர்க்கப்பட்ட மலாய் மற்றும் சீன இலக்கியப் படைப்புகளையும் கொண்டு சேர்க்கும் முயற்சியை தாங்கள் முன்னெடுப்பதாக நவீன் கூறினார்.

''முதலாவது நூல், மலாய் மொழியின் முன்னணி எழுத்தாளர் எஸ்.எம் சாகிர் என்பவரின் மலாய் கதைகளை அ.பாண்டியன் தமிழில் மொழிப் பெயர்க்க அந்நூல் இந்நிகழ்ச்சியில் வெளியீடு காண்கிறது. அதைத் தொடர்ந்து ஏழு சீன எழுத்தாளர்களின் ஏழு கதைகள் மலேசியாவின் ஏழு இளம் தமிழ் எழுத்தாளர்கள் மொழிப் பெயர்க்க அந்நூலும் இந்நிகழ்ச்சியில் வெளியீடு காண்கிறது. இதனிடையே, தமிழில் எழுதப்பட்டுள்ள மிக முக்கியமான 10 கதைகள் மலாய் மொழிக்கு எஸ்.சரவணன் மூலமாக மொழிப் பெயர்க்கப்பட்டு இந்நிகழ்ச்சியில் வெளியீடு காண்கிறது,'' என்றார் அவர்.

இந்த நூல் வெளீயீட்டைத் தொடந்து, ஒவ்வோர் நூல் குறித்து கலந்துரையாடல் அங்கமும் இடம்பெறும் என்று அவர் விளக்கினார்.

''மூன்று இன எழுத்தாளர்களும் கலந்து கொள்வதால் இந்நிகழ்ச்சி முழுவதும் மலாய் மற்றும் ஆங்கில மொழியில் நடைபெறும். இதுபோன்ற ஒரு முயற்சி மலேசியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறை. எனவே, வாசகர்கள் திரளாக வந்து இந்த நிகழ்ச்சியில் உங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றுக் கேட்டுக் கொள்கிறேன்,'' என்றார் அவர்.

பிற்பகல் மணி 2 தொடங்கி மாலை மணி 6 வரை இலவசமாக நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு வருகைத் தருவோர் முன் பதிவிற்கு www.vallinam.com.my என்ற அகப்பக்கத்தை நாடலாம். 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeFWeiPJXHRu60rPxE-QapVwfBPMrwb86VF5TMjWEDQdHVLFQ/viewform

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ) 502)