கோலாலம்பூர், 07 அக்டோபர் (பெர்னாமா) -- மலேசிய காற்பந்து சங்கம், எப்.ஏ.எம் மற்றும் மலேசிய குடியுரிமைப் பெற்ற அதன் அயல் நாட்டு ஆட்டக்காரர்கள் எழுவரை உட்படுத்திய தகுதி ஆவண விவகாரத்தில், ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கும் அனைத்துலக காற்பந்து சம்மேளனம் பிஃபாவின் முழு தீர்ப்பு அறிக்கை வெளியாகி உள்ளது.
அதன் தொடர்பில், நிர்ணயிக்கப்பட்ட சட்டவிதிமுறைகள் வழி தங்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எப்.ஏ.எம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில், தேவையான ஆவணங்களையும் ஆதாரங்களையும் முழுமையாகவும், உடனடியாகவும் பிஃபாவிடம் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாக எப்.ஏ.எம் கூறுகிறது.
குறிப்பாக, குறிப்பிடப்பட்ட ஆட்டக்காரர்கள் போலி ஆவணங்களை பெற்றதாகவோ அல்லது தகுதி விதிகளை திட்டமிட்டு தவிர்க்க முயன்றதாகவோ கூறப்படும் பிஃபாவின் குற்றச்சாட்டுகளை எப்.ஏ.எம் மிகக் கடுமையாகக் கருதுகிறது.
அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அது வலியுறுத்துகிறது.
ஆட்டக்காரர்களின் தகுதி தொடர்பான அனைத்து ஆவணங்களும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படி முழுமையாகத் தயாரிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டவை என்றும் எப்.ஏ.எம் தெரிவித்தது.
மேலும், இந்த வழக்கில் நீதி பெறுவதற்காக எப்.ஏ.எம் தனது அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 10 -ஆம் தேதி, வியட்நாமுக்கு எதிரான 2027 ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்றின் மூன்றாவது ஆட்டத்தில், தமது ஆட்டக்காரர்களை களமிறக்க எப்.ஏ.எம் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தது கண்டறியப்பட்டதாக அண்மையில் பிஃபாவின் ஒழுங்குமுறைக் குழு குற்றம் சாட்டியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)