பொது

KUSKOP-இன் கீழ் இந்திய சமுதாயத்திற்கு அதிகமான ஒதுக்கீடு

11/10/2025 02:43 PM

பெட்டாலிங் ஜெயா, 11 அக்டோபர் (பெர்னாமா) --  நேற்று பிரதமர் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம், மக்களின் நலன், குறிப்பாக இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டை ஆதரிப்பதற்கான மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

இந்திய சமுதாயத்திற்குப் பல்வேறு திட்டங்களை மேற்கொள்வதற்காக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு, KUSKOP-இன் கீழ் அதிகமான ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருப்பதாக அதன் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

''நிறைய திட்டங்கள் இருக்கின்றது. உதாரணமாக, நமது அமைச்சின் கீழ் அமானா இக்தியார், BRIEF-i மற்றும் ஸ்பூமி மற்றம் ஸ்பூமி கோஸ் பிக் ஆகிய திட்டங்களுக்குத் தலா 10 கோடி ரிங்கிட் உள்ளது. இரண்டு புதிய திட்டங்களை நாம் அறிமுகப்படுத்தி இருக்கின்றோம். SME வங்கியின் கீழ் வணிகம் எனும் திட்டம். அதோடு, தற்போது PERNAS-இன் கீழ் சூரியன் எனும் திட்டத்தைத் தொடங்கி இருக்கின்றோம். 5 கோடி நாம் கொடுத்திருக்கின்றோம். எனவே, நமது அமைச்சின் கீழ் 50 கோடிக்கான திட்டங்களை நாம் உருவாக்கியிருக்கின்றோம்'', என்றார் அவர்.

இன்று, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சின் மடானி விற்பனை திட்டம், JMKU-வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் அதனை கூறினார்.

இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் பல்வேறு தொழில்முனைவோர் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, இவ்வாண்டு KUSKOP-இன் கீழ் சுமார் 50 கோடி ரிங்கிட் ஒதுக்கியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)