பொது

பிரதமரின் சிறப்பு நிதி உதவி; அரசாங்க ஊழியர்கள் வரவேற்பு

11/10/2025 02:48 PM

புத்ராஜெயா, 11 அக்டோபர் (பெர்னாமா) --  நேற்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது பிரதமர் அறிவித்த சிறப்பு நிதி உதவியை அரசாங்க ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு வழங்கப்படும் அந்த சிறப்பு நிதியை வெறும் உதவியாக மட்டுமின்றி மக்கள் மீது அரசாங்கம் கொண்டிருக்கும் அக்கறையின் அடையாளமாகவும் கருதுவதாக, அரசாங்க ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.

அதோடு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள், அரசாங்க துறையில் தாங்கள் மேற்கொள்ளும் சேவைக்குக் கிடைக்கும் அங்கீகாரமாகவும் அந்நிதியைப் பார்ப்பதாக கூறினர்.

"பொது சேவை ஊழியர்களுக்கு அலவன்ஸ் மட்டுமின்றி வேலைகள், பதவி உயர்வு, திட்டங்கள் மற்றும் பிற சலுகைகளை வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதோடு, சிறப்பு உதவி நிதி வழங்குவதன் மூலம் மக்களின் சுமையைக் குறைக்க முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம். நாங்கள் தொடர்ந்து சிறந்த சேவையை வழங்குவோம்", என்று ஃபஹட் மட்லின் கூறினார்.

"அந்த அறிவிப்பிற்காக மிகவும் காத்திருந்தோம். பண்டிகையின் போது அதனை பயன்படுத்துவதற்கு. ஆம், எப்போதும் பல முயற்சிகள் மற்றும் புதிய திட்டங்களைச் செய்ய வேண்டியிருக்கும்", என்றார் நோர் அசியான் அப்துல்லா.

இதனிடையே, பண்டிகையைக் கொண்டாடாத அரசாங்க ஊழியர்களுக்குத் தங்களின் முதலீடு, அவசரகால சேமிப்பு மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவீனங்கள் என பல வடிவில் வழங்கப்படும் நிதி பயன்பெறும் என்றும் சிலர் கூறினர்.

''ஒரு அரசாங்க ஊழியராக இருக்கும் பட்சத்தில் பிரதமர் அறிவித்த சிறப்பு நிதி ஒரு உன்னதமான அறிவிப்பாகும். அரசாங்க ஊழியர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கை செலவீனங்களை ஈடு செய்யும் வகையில் அந்த சிறப்பு நிதி உதவியாக இருக்கும் என்று நாம் நம்புகின்றேன்'', என்று கமலேஸ்வரி சுப்ரமணியம் கூறினார்.

"அரசாங்க ஊழியர்கள் என்று சொல்லும்போது, நிறைய வேலைகள் நம்மை சுற்றி இருக்கும். பணத்தைத் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தும் ஒரு சூழ்நிலையும் உருவாகும். ஆனால், முக்கியமான தகவல் என்னவென்றால் நாம் இதனை சரியான முறையில் செலவிட வேண்டும். சேமிப்பிற்கும் பயன்படுத்த வேண்டும். எனவேதான், அவசர நேரங்களில் நமது செலவீனங்களை ஈடுச் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்", என்றார் யுவராணி கணேசன்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)