பொது

இன்ஃப்ளுன்சா நோய்த் தொற்றுக்கான காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும்

15/10/2025 07:23 PM

கோலாலம்பூர், 15 அக்டோபர் (பெர்னாமா) - நாட்டில் பரவி வரும் இன்ஃப்ளுன்சா நோய்த்தொற்று A மற்றும் B நோய்ச் சம்பவங்களுக்கான எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கடந்த வியாழக்கிழமை சுகாதார அமைச்சு செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நோய் கொவிட்-19 நோய்த்தொற்றுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் மாறுபட்டிருந்தாலும் இவ்விரு நோய்களுக்கான வித்தியாசத்தைக் கண்டுப்பிடிப்பது மிகவும் கடினமாகும்.

அதிலும், குறிப்பாக இரண்டு அல்லது ஐந்து வயதிற்கு கீழ் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மத்தியில் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்நோய் ஏற்படுவதற்கானக் காரணம் மற்றும் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்குகின்றார் குடும்ப நல மருத்துவர் டாக்டர் ஷரத் ராஜ்குமார் கஜேந்திரன்.

"நோய் எதிர்ப்பு சக்தி குறைவுடையோர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீண்டகால ஸ்டீராய்டு சிகிச்சை (long-term steroid) பெறுவோர் இந்நோயால் அதிக ஆபத்து உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்," என்றார்.

ஆண்டுக்கு ஒருமுறை செலுத்திக் கொள்ளும், இன்ஃப்ளுன்சா நோய்த்தொற்றுக்கான தடுப்பு ஊசியைச் செலுத்த தவறுவது, காலநிலை மாற்றம், தூய்மையைப் பராமரித்து கொள்ளாதது போன்றவைகள் இத்தொற்று எளிதில் ஏற்படுவதற்கான காரணங்கள் என்று அவர் கூறினார்.

"இன்ஃப்ளுன்சா  தடுப்பூசி ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தப்பட வேண்டியது அவசியம், ஏனெனில் அதன் பாதுகாப்பு ஒரே ஆண்டுக்கே மட்டுப்பட்டது. அதன் பின்னர் பாதுகாப்புத் திறன் குறைவடையும். எனவே, ஒவ்வொரு வருடமும் இந்த தடுப்பூசியை எடுத்துக் கொள்வது முக்கியம். இரண்டாவதாக, தற்போது நிலவும் மழைக்கால ஈரப்பதமான சூழல் கிருமிகள் எளிதில் பரவ வாய்ப்பளிக்கிறது. மூன்றாவதாக, மக்கள் முகக்கவசம் அணிவதும், கைதுவையியல் நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதும் குறைந்துள்ளதால், நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது ," என்று கூறினார்.

அதோடு, ஒருவரது உமில் நீர் மற்றும் காற்றின் மூலம் எளிதில் மற்றொருவருக்குப் பரவக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கும் இக்கிருமி தொற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் டாக்டர் ஷரத் விவரித்தார்.

"முக்கியமாகத் தேவைப்படும் மருந்து ஒரு வைரஸ் எதிர்ப்பு (Anti Virus) மருந்தான Oseltamivir ஆகும். இதை தவிர, இருமல், சலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்காக ஒவ்வொன்றிற்கேற்ப தேவையான நிவாரண மருந்துகளையே பயன்படுத்தலாம்," என்று அவர் கூறினார்.

பாதுகாப்பு கருதி முகக் கவசம் அணிந்து கொள்வது, SANITIZER எனப்படும் கிருமி நாசினி திரவத்தைப் பயன்படுத்துவது மற்றும் உடல்நலக்குறைவு கண்டவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதன் மூலம், இந்நோய் பரவுதலை தடுக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

இன்ஃப்ளுன்சா நோய்த்தொற்று சம்பவங்கள் அதிகரிப்பது குறித்து பெர்னாமா தொடர்பு கொண்டபோது, டாக்டர் ஷரத் ராஜ்குமார் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)