பொது

போதைப்பொருள் கடத்தலில் தம்பதி கைது

31/10/2025 06:47 PM

ஈப்போ, 31 அக்டோபர் (பெர்னாமா) -- கடந்த புதன்கிழமை, தைப்பிங்கில் 28 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் விநியோகிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கணவன் மனைவி தம்பதியைப் போலீசார் கைது செய்தனர்.

39 வயதான உள்நாட்டு ஆடவரை மாலை மணி 5.15 அளவில் பொக்கோ அசாம் பகுதியில் சாலையோரத்தில் போலீஸ் கைது செய்த வேளையில் அதே நாளில் 26 வயதான அச்சந்தேக பெண் தாமான் அஸ்சமரா பகுதியில் உள்ள வீடொன்றில் பிடிபட்டதாகப் பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

5.06 கிலோகிராம் எடையிலான மெத்தம்பெட்டமைன் வகை போதைப்பொருள் என்று சந்தேகிக்கப்படும் ஆறு பொட்டலங்களும் 84.75 லிட்டர் எடையிலான திரவப் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக டத்தோ நூர் ஹிசாம் குறிப்பிட்டார்.

மேலும், ஒரு லட்சம் ரிங்கிட் என்று மதிப்பிடப்பட்ட நிசான் நவரா மற்றும் ஹோண்டா சிட்டிரக வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

"பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 28 லட்சம் ரிங்கிட் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போதைப்பொருள் பேராக் மாநிலத்திற்கு வெளியே விநியோகிக்க வைக்கப்பட்டிருந்ததாகச் செல்லப்பட்டதாகச்
சந்தேகிக்கப்படுகிறது," என்று டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் குறிப்பிட்டார்.

இன்று பேராக் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

மறுவிற்பனைக்காகக் குறைந்த தரம் வாய்ந்த மெத்தம்பெட்டமைன்னை மீண்டும் பதப்படுத்தும் செயல்பாட்டில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் உபகரணங்கள் மற்றும் ரசாயனங்களையும் போலீஸ் பறிமுதல் செய்தனர்.

இத்தம்பதியினர் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் பேராக்கிற்கு வெளியே உள்ள சந்தையில் விற்க இருந்ததாகவும் 51,000க்கும் மேற்பட்ட போதைப் பித்தர்கள் இதைப் பயன்படுத்தலாம் என்றும் நம்பப்படுகிறது.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)