பினாங்கு, 4 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த மாதம் 18-ஆம் தேதி கம்போங் செகோலா ஜூரூ-வில் உள்ள வீட்டில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட வழக்கிற்குத் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நேபாளத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவருக்கு எதிரான வழக்கு விசாரணையை புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இம்மாதம் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
குற்றம் சாட்டப்பட்ட 35 வயதுடைய தினேஷ் குமார் மன்டால்-க்கு சரளமாக மலாய்மொழி பேசத் தெரியாததால் அவர் மீதான குற்றஞ்சாட்டை வாசிக்க ஒரு நேபாள மொழிபெயர்ப்பாளரை நியமிப்பதற்கான கால அவகாசம் தேவைப்படுவதால் மாஜிஸ்திரேட் நூருல் ரஷிதா மோஹட் அகிட் அத்தேதியை நிரணயித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சாகும் வரையில் தூக்கு தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் 12-க்கும் குறையாத பிரம்படிகளும் விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் பதிவாகி இருக்க வேண்டிய இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதியளிக்கவில்லை.
கடந்த மாதம் 18-ஆம் தேதி, கம்போங் செகோலா ஜூரூ-வில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 51 வயதுடைய சரியா சே ஹின் சமையலறையிலும் அவரது வளர்ப்பு மகளான 11 வயது நூர் அஃப்ரினா அலிஷா அப்டுல் ரஹீம் வீட்டின் மேல் மாடியிலும் இறந்து கிடக்கக் காணப்பட்டனர்.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் 57 வயது கணவர் அக்டோபர் 25-ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்குத் போலீசார் தடுத்து வைத்திருந்தனர். விசாரணைக்கு உதவ தினேஷ் குமார் உட்பட மேலும் மூன்று நேபாள ஆடவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)