சிந்தோக், 09 நவம்பர் (பெர்னாமா) -- மலேசியா, தாய்லாந்து எல்லைப் பகுதிக்கு அருகே சட்டவிரோதக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கிய சம்பவம் தொடர்பில் அதில் பயணித்தவர்களைக் கண்டறியும் வகையில் லங்காவி போலீஸ் மற்றும் பிற அமலாக்க நிறுவனங்கள் கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளன.
தெலுக் எவா மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சுற்றி ரோந்துப் பணிகளை அதிகரித்து வருவதாகவும் இப்படகில் மறைந்திருக்கும் அல்லது சிக்கியிருப்பவர்களைக் காண நேர்ந்தால் உடனே புகாரளிக்குமாறும் அப்பகுதி மக்களிடம் கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா கேட்டுக் கொண்டார்.
போலீசாருக்கு முதற்கட்ட தகவல் அடிப்படையில் மியன்மாரில் இருந்து 300 சட்டவிரோத குடியேறிகள் ஒரு கப்பலில் பயணித்ததாகவும் மலேசிய கடற்பரப்பை நெருங்கும் போது அது மூழ்கியதாகவும் டத்தோ அட்ஸ்லி அபு ஷா கூறினார்.
இதுவரை மியன்மார், வங்காளதேசம், ரோஹிங்யா அகதிகள் ஆகியோரை உட்படுத்தி பத்து பேர் கண்டறியப்பட்டுள்ள வேளையில் ரோஹிங்யாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
இவர்களைத் தவர்த்து இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றவர்கள் இன்னும் மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று தமது தரப்பு நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பயணம் ஆவணங்கள் ஏதுமில்லா நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்படுள்ள அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் டத்தோ அட்ஸ்லி கூறினார்.
"மூழ்கிய அப்படகில் 300 பேர் இருந்ததாக நம்பப்படுகிறது. ஆனால் இதுவரை நாங்கள் பத்து பேர் வரை மட்டுமே கண்டுபிடித்துள்ளோம். அடுத்த சில நாட்களில் குறிப்பாக மூன்று முதல் ஒரு வாரத்திற்குள் இச்சம்பவத்தில் உயிரோடு மற்றும் உயிரிழந்தவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து விடுவோம் என்று நான் நம்புகிறேன். இது குறித்து நாங்கள் தீவிரமாக விசாரணை மேற்கொள்வோம். யார் அவர்களை நாட்டிற்குள் வரவழைத்தது என்பது குறித்தும் ஆராய்வோம்,'' டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.
இதனிடையே, சட்டவிரோத குடியேறிகளை அழைத்து வருவதற்கான தளமாகச் சம்பந்தப்பட்டப் மோசடிக் கும்பல் லங்காவியை தேர்ந்தெடுத்ததாகத் தமது தரப்பு நம்புவதாகவும் அட்ஸ்லி கூறினார்.
இன்று கெடா சிந்தோக்கில் நடைபெற்ற வட மலேசிய பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவிற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)