இந்தியா, 11 நவம்பர் (பெர்னாமா) -- மத்திய டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை அருகே திங்கட்கிழமை மாலை காரில் இருந்த வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், 20 பேர் காயமடைந்தனர். இதனால், இந்தியா முழுவதும் பல நகரங்களில் உயர் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று நினைவுச்சின்னமான செங்கோட்டை அருகே வாகனம் ஒன்று மெதுவாக நகர்ந்து சென்று சாலையில் உள்ள சிவப்பு விளக்கில் நின்றபோது குண்டு வெடித்துள்ளது.
இதனால், அருகிலுள்ள வாகனங்களிலும் தீப்பிடித்ததோடு கிட்டத்தட்ட 20-கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மும்பை, டெல்லியை எல்லையாகக் கொண்ட உத்தரபிரதேசம் மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் உட்பட நாடு தழுவிய அளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் நிகழ்ந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததோடு விசாரணையை மேற்கொண்டனர்.
இதனிடையே, டெல்லியில் நடந்த இக்கொடூர சம்பவம் குறித்து இந்திய போலீசார் "பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடப் பயன்படுத்தப்படும் கடுமையான சட்டத்தின் கீழ்" விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் பதிவு செய்த வழக்கை மேற்கோள் காட்டி தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் என்று அழைக்கப்படும் இச்சட்டம் இந்தியாவின் முக்கிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாகும்.
இச்சட்டம் பயங்கரவாதம், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான செயல்களை விசாரித்து வழக்குத் தொடரப் பயன்படுத்தப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)