பொது

NPE 2 திட்டம் 2029இல் நிறைவடையலாம்

12/11/2025 06:47 PM

ஜாலான் பந்தாய் டாலாம், 12 நவம்பர் (பெர்னாமா) -- கோலாலம்பூரில் உள்ள பந்தாய் டாலாம் டோல் சாவடியிலிருந்து ஜாலான் இஸ்தானா வரையில் சுமார் 6.4 கிலோமீட்டர் தூரத்திலான முதன்மை பாதையை உட்படுத்தி 170 கோடி ரிங்கிட் மதிப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாரு பந்தாய் நெடுஞ்சாலை NPE 2 விரிவாக்கத் திட்டம் வரும் 2029ஆம் ஆண்டில் நிறைவடைந்து போக்குவரத்திற்குத் திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2040ஆம் ஆண்டு கோலாலம்பூர் போக்குவரத்து முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதியாக NPE 2 உள்ளதாகக் கூறிய பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி, பந்தாய் டாலாம், பங்சார், மஹாமேரு ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் அத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

''பந்தாய் டாலாம் டோல் சாவடியிலிருந்து ஜாலான் இஸ்தானா வரையிலான 6.4 கிலோமீட்டர் NPE 2 திட்டம் தற்போது நெரிசல் மிக அதிகமாக இருக்கும் பந்தாய் டாலாம், பங்சார், மஹாமேரு சாலைகளில் நெரிசலைக் குறைக்க உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவடைந்தவுடன் பங்சார் அல்லது மிட்வேலியிலிருந்து சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் சாலையின் பயண நேரத்தை 25 நிமிடங்கள் வரை குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார் டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா லிங்கி.

இன்று கோலாலம்பூர் பந்தாய் டாலாம் டோல் சாவடியில் NPE 2 திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் டத்தோ ஶ்ரீ அலெக்செண்டர் நந்தா அவ்வாறு கூறினார்.

இத்திட்டத்திற்கான மேம்பாட்டுச் செலவு அரசாங்கத்திற்கு நிதிச்சுமையை ஏற்படுத்தாத வகையில் IJM Corporation நிறுவனத்தின் துணை நிறுவனமான New Pantai Expressway முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)