உலகம்

ரஷ்யாவின் தாக்குதல்; உக்ரேனில் 26 பேர் பலி

20/11/2025 04:09 PM

டெர்னோபில், 20 நவம்பர் (பெர்னாமா) -- உக்ரேனின் தெர்னொபில் நகரின் மீது, ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அங்குள்ள குடியிருப்பு கட்டிடங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதில்
பலர் காணாமல் போயிருப்பதாக உக்ரேன் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

தாக்குதலுக்குப் பின்னர் தெர்னொபில் நகரிலுள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மேல் தளங்கள் சேதமடைந்திருக்கும் காணொளிகளை ரொய்டெர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தகர்க்கப்பட்ட கட்டிடங்களுக்கு இடையில், ஏற்பட்டிருக்கும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடுவதுடன் காணாமல் போனவர்களை தேடும் பணிகளும் தொடர்கின்றன.

இரவு நேர தாக்குதலுக்கு பின்னர், மூன்று குழந்தைகள் உட்பட 26 பேர் காணாமல் போயிருக்கும் வேளையில், சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரேன் உள்துறை அமைச்சர் இஹோர் க்லைமென்கோ கூறினார்.

உக்ரேன் மீது 476 ஆளில்லா விமானங்கள் மற்றும் 48 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியதில், பல மாவட்டங்களில் மின்சாரத் துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)