கோலாலம்பூர், டிசம்பர் 02 (பெர்னாமா) -- தென் தாய்லாந்தில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 2025 சீ விளையாட்டுப் போட்டிகளுக்கு மலேசிய அணியைச் சோங்க்லாவில் இருந்து பேங்காக் மற்றும் சோன்புரிக்கு மாற்றுவதற்கான அனைத்து கூடுதல் செலவுகளையும் ஏற்க தேசிய விளையாட்டு மன்றம் எம்.எஸ்.என் இணக்கம் தெரிவித்துள்ளது.
மொத்த செலவு ஐந்து லட்சம் ரிங்கிட்டிற்கு மேல் அதிகமாகும் என்று கணிக்கப்பட்டிருக்கும் நிலையில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ தலைமையிலான எம்.எஸ்.என்னின் நிர்வாக வாரியக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டது.
போட்டிக்கான இடம் இறுதி நிமிடத்தில் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து பத்து விளையாட்டுகளின் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களது கவனம் மற்றும் தயார்நிலை பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எம்.எஸ்.என் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரிவு A மற்றும் பிரிவு Bஇன் போட்டியாளர்கள் இதில் அடங்குவர்.
டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கும் சி விளையாட்டுப் போட்டிகளில் அவர்களின் செயல்திறனைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு சம்பவங்களும் தவிர்க்கப்படும்.
நாட்டிற்கு வெற்றியைக் குவிக்கப் போராடும் அனைத்து விளையாட்டாளர்களுக்கும் இது ஓர் ஊக்குவிப்பாக இருக்கும் என்றும் எம்.எஸ்.என் குறிப்பிட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)