பொது

அமைச்சரவை மாற்றத்திற்கான பெயர்கள் இறுதி செய்யப்படவில்லை - பிரதமர்

07/12/2025 05:18 PM

கோலாலம்பூர், டிசம்பர் 07 (பெர்னாமா) -- அமைச்சரவை மாற்றத்திற்கு முன்மொழியப்பட்ட சில பெயர்களை தாம் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் அந்த பெயர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

''நான் அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். நான் அவசரப்பட விரும்பவில்லை. நிச்சயமாக, நான் கேட்ட பிறகு சிந்திக்க வேண்டும். நான் இன்னும் அனைத்து கட்சித் தலைவர்களுடனும் விவாதிக்கவில்லை. நிச்சயமாக, முடிவுதான் எனது முன்னுரிமை. மேலும், இவை அவர்களின் கருத்துக்கள் என்று அவர்கள் சொல்வதற்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆனால் இறுதியாக நான் முடிவு செய்ய வேண்டும். (கேள்வி: ஜ.செ.க அவர்களை அழைக்க வில்லை என்று கூறியுள்ளது?) ஆம், இன்னும் இல்லை, உண்மையில் டத்தோ ஸ்ரீ சாஹிட்டுடனும் இல்லை.'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம

ஞாயிற்றுக்கிழமை, கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் நடைபெற்ற புத்தக அறிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அன்வார் அவ்வாறு கூறினார்.

கல்வி அமைச்சர்ஃபட்லினா சிடேக்-கை நீக்க வேண்டும் என்று ம.சீ.ச தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் -இன் பரிந்துரை குறித்தும், பிரதமர் கருத்து தெரிவித்தார்.

''அவரது கருத்து புதியவை என்றாலும், அவர் அரசாங்கத்தில் இருந்தபோது ​​அது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. அது அவரது கருத்து.'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம். 

தற்போது, பொருளாதார அமைச்சர், இயற்கை வளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சர், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர், முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆகிய நான்கு பதவிகள் காலியாகவுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)