கோலாலம்பூர், 08 டிசம்பர் (பெர்னாமா) -- மலேசிய காற்பந்து சங்கம், எஃப்.ஏ.எம் மற்றும் சம்பந்தப்பட்ட ஏழு ஆட்டக்காரர்கள் மீது அனைத்துலக காற்பந்து சம்மேளனம், பிஃபா விதித்த தண்டனை தொடர்பில் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம், சி.ஏ.எஸ் இடம் மேல்முறையீடு செய்திருப்பதை எஃப்.ஏ.எம் உறுதிப்படுத்தியது.
முழுமையான எழுத்துப்பூர்வ பதிலைச் சமர்ப்பிக்க டிசம்பர் 18-ஆம் தேதி வரை 10 நாட்களுக்கான கால அவகாசத்தை எஃப்.ஏ.எம் வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டும் என்று சி.ஏ.எஸ் தீர்ப்பளித்திருப்பதாக, அதன் முன்னாள் தலைவர் டத்தோ முஹமட் யூசோப் மஹாடி கூறினார்.
தொழில்முறை ரீதியாகவும், வெளிப்படையாகவும் மட்டுமின்றி வழங்கப்பட்ட அனைத்து சட்ட விதிமுறைகளையும் மதிப்பதற்கான முழு உறுதிப்பாட்டை இச்செயல்முறை கொண்டிருப்பதை எஃப்.ஏ.எம் வலியுறுத்துவதாக, டத்தோ யூசோப் தெரிவித்தார்.
எந்தவொரு அண்மைய முன்னேற்றங்கள் குறித்தும் எஃப்.ஏ.எம் அவ்வப்போது அறிவிக்கும் என்று அவர் கூறினார்.
கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி, கேப்ரியல் பெலிப்பெ அரோச்சா, ஃபாகுண்டோ கார்சஸ், ரோட்ரிகோ ஹோல்கடோ, இமானோல் மச்சுகா, ஜோவோ ஃபிகியூரிடோ, ஜான் இராசபால் மற்றும் ஹெக்டர் ஹெவல் ஆகிய எழுவரின் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றத்திற்காக தமது அமைப்பின் ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவு 22-ஐ மீறியது கண்டறியப்பட்டதாக பிஃபா உறுதிப்படுத்தியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)