பொது

இல்லாத முதலீட்டு திட்டத்தில் 7 லட்சத்து 83 ஆயிரம் ரிங்கிட் இழப்பு

10/12/2025 03:31 PM

கோலாலம்பூர், 10 டிசம்பர் (பெர்னாமா) --  முகநூல் பக்கத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட இல்லாத முதலீட்டு திட்டத்தில் ஏமாந்து சுமார் 7 லட்சத்து 83 ஆயிரம் ரிங்கிட்டை உணவக உரிமையாளர் ஒருவர் இழந்தார்.

அந்த திட்டத்தில் கவரப்பட்ட 30 வயதான அந்த ஆடவரை நபர் ஒருவர் தொடர்புக் கொண்டு, தினமும் 550 முதல் 600 ரிங்கிட் வரை லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் அயோப் கூறினார்.

கடந்த அக்டோபர் 20 முதல் டிசம்பர் 7-ஆம் தேதி வரை தனிப்பட்ட சேமிப்பு, வணிக சேமிப்பு, குடும்பக் கடன் மற்றும் தங்க நகைகளை விற்று, ஐந்து வெவ்வேறு வங்கி கணக்குகளில் 23 பண பரிவர்த்தனைகளை அந்நபர் செய்ததாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அஸ்ரி அக்மார் அயோப் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், பணம் செலுத்தியப் பின்னர், அந்நபர் இலாப பணத்தை எடுக்க தவறி விட்டதாகவும், மேலும் கூடுதல் பணம் செலுத்தும்படி கேட்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே, தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சம்பந்தப்பட்ட அந்த உணவக உரிமையாளர், நேற்று ஜெராந்துட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 420-இன் கீழ் விசாரிக்கப்படுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)