புக்கிட் அமான், 10 டிசம்பர் (பெர்னாமா) -- மலாக்கா, டுரியான் துங்காலில், கடந்த மாதம் 24-ஆம் தேதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று ஆடவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் தங்களின் வாக்குமூலங்களைப் பதிவுச் செய்தனர்.
இன்று காலை மணி 10:45-க்கு, அம்மூவரின் குடும்ப உறுப்பினர்கள், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு வந்தனர்.
சம்பவத்தின் போது குரல் பதிவுச் செய்ய பயன்படுத்தப்பட்ட கைத்தொலைப்பேசியை பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைத்ததாக அவர்களை பிரிதிநிதிக்கும் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் கூறினார்.
கடந்த நவம்பர் 24-ஆம் தேதி, மலாக்கா, டுரியான் துங்காலில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் போலீசாரை நோக்கி பராங் கத்தியை வீசிய சம்பவத்தில் 24 முதல் 29 வயதுடைய மூன்று ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதிகாலை 4.30 மணிக்கு நிகழ்ந்த இச்சம்பவத்தில், கொபெரல் பதவி கொண்ட 30 வயதான போலீஸ் அதிகாரியின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனிடையே, போலீசாரின் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த பாதிக்கப்பட்ட மூன்று ஆடவர்களின் குடும்ப உறுப்பினர்களின் குற்றஞ்சாட்டுகளை விசாரிக்க தமது தரப்பு ஒரு சிறப்பு குழுவை அமைத்துள்ளதாக, கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறையின் இயக்குநர் டத்தோ எம்.குமார் கூறினார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)