பொது

தாமதமான நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டம்; அடாம் ரட்லான் வாக்குமூலம் அளிப்பது உறுதி

10/12/2025 06:00 PM

புஞ்சாக் ஆலம், 10 டிசம்பர் (பெர்னாமா) -- தாமதமான நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டம் குறித்த விசாரணை தொடர்பாக பெர்சத்துவின் செகாம்புட் தொகுதி துணைத் தலைவர் அடாம் ரட்லான் அடாம் மஹமட் வாக்குமூலம் அளிக்கவிருப்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் உறுதிப்படுத்தியுள்ளது.

இரண்டாம் கட்ட கோலாலம்பூர்-புத்ராஜெயா நெடுஞ்சாலை அல்லது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ செல்லும் மெக்ஸ் II கட்டுமானத்திற்காக இந்த விசாரணை நடத்தப்பட்டது.

இதன் தொடர்பில் உத்தரவாதம் அளிக்க அடாம் ரட்லான் தனது வழக்கறிஞர் தான் ஶ்ரீ ஷாஃபீ அப்துல்லா மூலம் எஸ்.பி.ஆர்.எம்-க்கு ஒரு கடிதத்தை அனுப்பியதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

''அடாம் ரம்லான் உண்மையில் முடிவு செய்து விட்டார். மேலும், விசாரணைக்கு உதவ விரைவில் திரும்பி வருவதாக அவர் உறுதியளித்துள்ளார். அன்று அவர் நாட்டில் இல்லாததால், எங்களுக்கு அவரின் உதவி தேவை. எனவே, நாங்கள் அவரைத் தொடர்புக் கொண்டுள்ளோம். அவரின் வாக்குமூலம் எடுக்கப்படும். மேலும், விசாரணைக்குப் பிறகு அவர் எங்கு வேண்டுமானாலும் செல்ல சுதந்திரம் உள்ளது,'' என டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

2019-ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவடையவிருந்த மெக்ஸ் II  நெடுஞ்சாலைத் திட்டத்தில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் இன்னும் ஒத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்த விசாரணைகளுக்கு, தற்போது வெளிநாட்டில் இருக்கும் அடாம் ரட்லானின் உதவி, எஸ்.பி.ஆர்.எம்-க்கு தேவைப்படுகிறது.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)