பொது

மலாக்காவில் மூவர் சுட்டுக் கொலை; போலீஸ் முழு விசாரணையை நடத்தும்

11/12/2025 05:15 PM

புத்ராஜெயா, டிசம்பர் 11 ( பெர்னாமா) -- மலாக்கா, டுரியான் துங்கால்-லில் கடந்த நவம்பர் 24ஆம் தேதி மூன்று ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளிடமிருந்து உட்பட அனைத்து ஆதாரங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் போலீஸ் முழுமையான விசாரணையை மேற்கொள்ளும்.

பரவலாக பகிரப்பட்ட குரல் பதிவு உட்பட குடும்ப உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் மூலம் சமர்ப்பித்த அனைத்து தகவல்களும் அல்லது ஆதாரங்களும் விசாரணையில் இணைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்

''முதலில் குடும்பத்தினரே வழக்கறிஞர் மூலம் குரல் பதிவு போன்றவை இருப்பது குறித்து பேசியதாக நான் நம்புகிறேன். மேலும், அதன் மூலமே அந்நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் (டத்தோ எம். குமார்) அறிவித்தது போல அது விசாரணை செயற்குழுவின் அதிகாரத்தில் உள்ளது.'' என்றார் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் 

விசாரணையின் முடிவை நிர்ணயிப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் வாக்குமூலம் பெறுவது உட்பட நடப்பில் உள்ள செயல்முறைகளின் அடிப்படையில் சிறப்பு விசாரணைக் குழு பணியாற்றுவதாக டத்தோ ஶ்ரீ சைஃபுடின் இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நடவடிக்கையில் போலீசாரின் அச்செயலில் அனைத்து சந்தேக நபர்களின் குடும்பத்தினரும் அதிருப்தி தெரிவித்திருப்பதாகக் கூறப்படுவது குறித்து விசாரணை மேற்கொள்ள டிசம்பர் 3ஆம் தேதி புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை சிறப்புக் குழுவை உருவாக்கியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)