சிகாம்புட், 11 டிசம்பர் (பெர்னாமா) -- சிகாம்புட்டில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் 26-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 38 வயதுடைய உள்நாட்டு ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
சம்பந்தப்பட்ட ஆடவரின் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் அவ்வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் நடவடிக்கை மையம் பி.ஜி.ஓ, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைச் சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இதனிடையே, அங்குள்ள குடியிருப்பாளர்கள் வழக்கம் போல தங்களின் தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வது இன்று காலை அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்தது.
மேலும், ஊடகவியலாளர்கள் சம்பந்தப்பட்ட ஆடம்பர குடியிருப்புப் பகுதிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.
இரவு மணி 8.46 அளவில் இச்சம்பவம் குறித்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்த நிலையில், ஶ்ரீ ஹர்தமாஸ், மென்ஜலரா, செந்தூல் மற்றும் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் தீயணைப்பு நிலையங்களின் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கட்டிடத்தின் தீ தடுப்பு அமைப்பு செயல்படாததால் தீயை அணைக்கும் முயற்சியில் சிக்கல் ஏற்பட்ட வேளையில், அதிகாலை மணி 2.03-க்கு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)