பொது

இயல்பான நடிப்பாலும் மாறுபட்ட குரலாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் தாஷா கிருஷ்ணகுமார்

11/12/2025 05:41 PM

விஸ்மா பெர்னாமா, 11 டிசம்பர் (பெர்னாமா) -- நடிப்பும் பாவனையும் மட்டுமின்றி குரலும் கூட ஒரு கலைஞரின் தனிகரற்ற திறனை அடையாளப்படுத்தும் என்பதை மெய்பித்துள்ளார் மலேசிய திரையில் வளர்ந்து வரும் நட்சத்திரமான நடிகை தாஷா கிருஷ்ணகுமார்.

பெண்மைக்கே உரிய மெல்லிய குரல், தம்மிடையே சற்று மாறுபட்டு கரகரப்பு நிறைந்ததாக ஒலித்தாலும் அதுவே பின்னாளில் தம்மை சுலபமாக நினைவில் வைத்து கொள்வதற்கு ஓர் அடையாளமாகவும் திகழ்ந்ததாக அவர் கூறுகிறார்.

வணிகவியல் துறையில் பயின்ற இவர் "மெந்தே" என்ற குறும்படத்தில் ஈஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனது கலையுலகப் பயணத்தை தொடங்கினார்.

அது முதல் எவ்வகை கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் சிரத்தை எடுத்து தமது கலைத் திறனை முழுமையாக வெளிப்படுத்தி வந்தார். 

அவரின் பன்முகத் திறமைகளின் பயனால் பல மேடைகள், தொடர் நாடகங்கள், தமிழ் மற்றும் மலாய் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இன்றுவரை மிளிர்ந்து வருவதாக தாஷா கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

''கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் என்னை அடையாளப்படுத்த காரணமாக இருந்தது என் குரல் என நான் நினைக்கிறேன். சற்று மாறுபட்ட என் குரல் தான் என்னுடைய தனித்துவமாக இருந்தது. இதனால் அனைவரும் என்னை எளிதில் அடையாளம் காண முடிந்தது,'' என தாஷா கிருஷ்ணகுமார் கூறினார்.

பெண்களை முதன்மைப்படுத்தி தயாரிக்கப்படும் திரைப்படங்கள் தற்போது அதிகரித்து வருவதால், கலையுலகின் மீது ஆர்வம் கொண்ட பெண்களுக்கு தற்போது அதிக வாய்ப்புகள் கிட்டுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

''பெண்கள் என்றாலே அதிமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாக உள்ளது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்பை காட்டிலும் இன்று ஊடகங்களில் பெண்களுக்கான ஆதரவும் விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. அதனால் நமக்கு கிடைக்கும் வாய்ப்பை நாம் எப்படி தக்க வைத்து கொள்கிறோம் என்பதில் தான் அனைத்தும் அடங்கியுள்ளது. அதே சமயம் ஒரு பெண்ணாக நாம் தைரியமாக செயல்பட வேண்டும்,'' என்றார் தாஷா. 

மலேசியாவில் சின்னத்திரை, பெரிய திரை என பல கதாபாத்திரங்களில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு மிக விரைவில் இந்திய சினிமாவில் நடிக்கும் தமது ஆசையையும் அவர் வெளிப்படுத்தினார்.

''அனைத்துலகத் திரையில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நான் எனது முழுத் திறமையையும் வெளிப்படுத்துவேன். 2026-ஆம் ஆண்டில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவின் தமிழ் சினிமா சிறப்பான தளம் என்று நாம் அனைவரும் அறிந்த ஒன்று. வாய்ப்பு கிடைத்தால் அங்குள்ள திரைப்படங்களில் நடித்து, அனுபவங்களைப் பெற்று மலேசிய தமிழ் திரைப்படங்களுக்கும் தொடர்ந்து எனது பங்களிப்பை வழங்குவேன்,'' என்று தாஷா கிருஷ்ணகுமார் கூறினார்.

தொடக்கத்தில் எதிர்மறை காதாபாத்திரங்கங்கள் மட்டுமே தமக்கு வழங்கப்பட்டு வந்தபோது, ஒரு வகை மனக்கலக்கம் இருந்தாலும், பின்னாளில் அவ்வகை கதாப்பாத்திரங்களே தமக்கு முத்திரை அளித்ததாகவும் அவர் கூறினார்.

ஏனெனில் இயல்பு கதாபாத்திரத்தைக் காட்டிலும் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடிப்பது சவால் நிறைந்தது என்று அண்மையில் பெர்னாமா செய்திகளுக்கு வழங்கிய நேர்க்காணலின் போது தாஷா தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)