பொது

சட்டவிரோதமாகக் கழிவுகளை அகற்றும் நடவடிக்கை தீவிரமாகக் கையாளப்பட வேண்டும்

11/12/2025 05:13 PM

கோலாலம்பூர், டிசம்பர் 11 (பெர்னாமா) -- சட்டவிரோதமாக கழிவுகளை அகற்றும் நடவடிக்கை உறுதியாகவும், தீவிரமாகவும், எந்த சமரசமும் இல்லாமல் கையாளப்பட வேண்டும்.

இனி எந்தவொரு கும்பலும் சட்டவிரோதமாக கழிவுகளை அகற்றும் தளங்களை நிறுவுவதை தடுக்க திடக்கழிவு நிர்வகிப்பு மற்றும் பொது துப்புறவு கழகம், SWCorp, ஆயுதமேந்திய அமலாக்கக் குழுவை அமைக்கும் முயற்சியை தமது தரப்பு ஆதரிக்கும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

செயலி மற்றும் தொலைபேசி வழி, புகார் அளிப்பது உட்பட திடக்கழிவு நிர்வகிப்பை வலுப்படுத்த இந்த ஆண்டு புதிய முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஙா கோர் மிங்  கூறினார்.

தற்போது வரை சட்டவிரோதமாக கழிவுகளை அகற்றுவது குறித்து 1,400 க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டதாக அவர் விவரித்தார்.

"சட்டம் 672-ஐ அமல்படுத்தும் ஏழு மாநிலங்களில் இந்த ஆண்டு 3,634 சட்டவிரோத கழிவுத் தளங்கள் வெற்றிகரமாக மூடப்பட்டுள்ளன. அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளின் அளவு 1,530 மெட்ரிக் டன்கள் ஆகும். 4,268 உளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக, சட்டவிரோதமாகக் கழிவுகளை அகற்றியதற்காக 22 வழக்குகள் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் மொத்தம் 385,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது," என்றார் அவர்.

சட்டவிரோத கழிவு தளங்களை மூடுவதில் அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைகள் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, அதனை பாராட்டும் விதமாக இன்று கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் ஙா அவ்வாறு உரையாற்றினார்.

2015-ஆம் ஆண்டு தொடங்கி  2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை, சட்டவிரோத கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 185 வாகனங்களை SWCorp பறிமுதல் செய்ததாகவும் ஙா குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)