பொது

கே.ஐ.எஸ் 2.0: இணைய அச்சுறுத்தல்கள் குறித்த தொடர் விழிப்புணர்வு

12/12/2025 04:15 PM

மலாக்கா, 12 டிசம்பர் (பெர்னாமா) -- இணைய அச்சுறுத்தல்கள் குறித்த மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் அதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் பெற்றோரிடையே இணைய பாதுகாப்பு தொடர்பிலான கல்வியில் கவனம் செலுத்த கே.ஐ.எஸ் 2.0 எனப்படும் இணைய பாதுகாப்பு பிரச்சாரத்தை அடுத்த ஆண்டு இரண்டாவது முறையாக தொடர அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்ட கே.ஐ.எஸ், இணையத்தைப் பயன்படுத்துவதில் நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஊடகத்தள வழங்குநர்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி பாட்சில் தெரிவித்தார்.

இன்று மலாக்கா, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தென் வட்டாரத்தின் பாதுகாப்பான இணைய பிரச்சார தொடக்க விழாவில் கலந்துகொண்ட அமைச்சின் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பின் துணைத் தலைமைச் செயலாளர் மனோ வீரபத்ரன், ஃபாமி பாட்சில்-இன் உரையை வாசித்தார்.

''எனினும், இந்நன்மைகள் இருந்தபோதிலும், இணைய பகடிவதை, இணைய மோசடி, தவறான தகவல்களைப் பரப்புதல், இணைய சூதாட்டம் மற்றும் மிகவும் கவலையளிக்கும் விதமாக, சிறார்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் அதிகரிப்பு போன்ற இணைய பாதுகாப்பு சவால்களை நாம் எதிர்கொள்கிறோம்,'' என மனோ வீரபத்ரன் கூறினார்.

கடந்த நவம்பர் வரை ஜோகூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் உள்ளிட்ட தென் பகுதி முழுவதும் உள்ள 1,478 கல்விக் கழகங்களிலிருந்து சுமார் 26,617 மாணவர்கள் கே.ஐ.எஸ்-இல் பங்கேற்றனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)