சுபாங் ஜெயா, டிசம்பர் 13 ( பெர்னாமா) -- அண்மையில், ஹெலிகாப்டரின் பாகங்களை ஏற்றிச் சென்று சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய டிரெய்லர் லாரி குறித்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவது தொடர்பில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
நேற்றிரவு மணி 8.06-க்கு, சம்பந்தப்பட்ட காணொளி தொடர்பான புகார் தங்கள் தரப்பிற்கு கிடைத்ததாக, சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார்.
கடந்த 4-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, கெசாஸ்-இல் இருந்து சுபாங் ஜெயா ஜாலான் பெர்சியாரான் கெவாஜிப்பான் நெடுஞ்சாலையை நோக்கி, ஹெலிகப்டரின் பாகங்களை ஏற்றிச் சென்ற அந்த டிரெய்லர் லாரி சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது
முதற்கட்ட விசாரணையில் அது குறித்து கண்டறியப்பட்டதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஏ.சி.பி. வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
ஏற்றிச் சென்ற பொருள்களின் எடை அதிகமாக இருந்ததால் லாரி நகர்வதற்கு சிரமத்தை எதிர்நோக்கியதுடன், சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி சாலை பயனர்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக, அவர் கூறினார்.
நெரிசல் காரணமாக, ஆம்புலன்சுகளின் இயக்கமும் பாதிக்கப்பட்டதாக, அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
சம்பந்தப்பட்ட லாரியின் பதிவு எண், இதுவரை போலீசாரால் அடையாளம் காணப்படவில்லை என்றும், எல்.என் 166/59 பிரிவு 9(2)-இன் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டிருப்பதாகவும், வான் அஸ்லான் வான் மாமாட் குறிப்பிட்டிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)