பொது

தேசிய நல்வாழ்வின் அடித்தளமாக குடும்பங்கள் வலுப்பெற வேண்டும்

13/12/2025 05:07 PM

கோத்தா கினபாலு, டிசம்பர் 13 (பெர்னாமா) -- 2048ஆம் ஆண்டில் அதிக வயதான நாடாக மலேசியா இடம்பெறும் என்பதால் தேசிய நல்வாழ்வின் அடித்தளமாகக் குடும்பங்கள் வலுப்பெற வேண்டும்.

2048ஆம் ஆண்டுக்குள் மொத்த மக்கள் தொகையில் 65 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்கள் 14 விழுக்காட்டளவு இருப்பார்கள் என்பதால் மலேசியா முதியவர்கள் அதிகம் வாழும் நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமரின் துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

மக்கள்தொகை மாற்றத்திற்கு அவர்களின் குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் நல்வாழ்வு தொடர்ந்து பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய தொடக்கக் கட்ட நடவடிக்கை மற்றும் சமூக விழிப்புணர்வு தேவைப்படுவதாகவும் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா கருத்துரைத்தார்.

"இந்த மாற்றங்களுக்கு உடனடி நடவடிக்கை மற்றும் திட்டமிடல் தேவைப்படுகிறது. குறிப்பாக மக்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மீது ஏற்படும் தாக்கத்தைத் திறம்பட கையாள முடியும் என்பதை உறுதிசெய்ய வேண்டும். இவ்விவகாரத்தில் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீது நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்." என்றார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா.

சபா, கோத்தா கினபாலுவில் உள்ள சபா அனைத்துலக மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற மடானி குடும்ப உற்சாக கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் அவ்வாறு பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)