பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 22 (பெர்னாமா) -- ஹரிமாவ் மலாயா அணியின் ஏழு விளையாட்டாளர்களை உள்ளடக்கிய போலி ஆவண விவகாரம் தொடர்பாக மலேசிய காற்பந்து சங்கம் எஃப்.ஏ.எம் போலீஸ் புகார் அளிக்கவிருக்கிறது.
இன்று பிற்பகல் நடைபெற்ற அந்நிர்வாகத்தின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக எஃப்.ஏ.எமின் இடைக்காலத் தலைவர் டத்தோ முஹமட் யூசோஃப் மஹாடி தெரிவித்தார்.
''ஃபிஃபாக்கு அனுப்பப்பட்ட ஆவணங்கள் போலியாக்கப்பட்டிருப்பதாக நாங்கள் புகாரளிப்போம். இந்த ஆவணங்கள் போலியாக்கப்பட்டிருப்பது எப்படி நடந்திருக்கும் அல்லது போலி ஆவணங்களைச் செய்ததற்கு யார் பொறுப்பு என்பதைப் போலீசார் விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்'', என்றார் டத்தோ முஹமட் யூசோஃப் மஹாடி.
போலீஸ் புகாரைத் தவிர்த்து ஹரிமாவ் மலாயா அணியின் ஏழு விளையாட்டாளர்களின் ஆவண விவகாரம் தொடர்பாக நிறுவப்பட்ட சுயேட்சை புலனாய்வுச் செயற்குழு IICஇன் அனைத்து பரிந்துரைகளையும் எஃப்.ஏ.எம் பின்பற்றும்.
எஃப்.ஏ.எம்முகு IIC வழங்கிய பரிந்துரைகளில் போலி என்று சந்தேகிக்கப்படும் ஆவணங்களின் உண்மையை நிரூபிப்பதற்கு அமலாக்க அதிகாரிகள் முழுமையான மற்றும் முறையான விசாரணையை நடத்த எஃப்.ஏ.எம் உடனடியாகப் போலீஸ் புகார் அளிக்க வேண்டும் என்பதும் அடங்கும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)