பொது

ஊழலை எதிர்க்கும் முயற்சிகளில் எந்தவொரு அச்சுறுத்தலையும் மடானி அரசாங்கம் பொறுக்காது

30/12/2025 06:30 PM

புத்ராஜெயா, டிசம்பர் 30 (பெர்னாமா) -- ஊழலை எதிர்த்துப் போராடும் முயற்சிகளில் நண்பர்களிடமிருந்தோ அல்லது எதிரிகளிடமிருந்தோ வரும் எந்தவொரு அச்சுறுத்தலையும் மடானி அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது அல்லது ஏற்றுக்கொள்ளாது.

ஊழல் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளில் அரசாங்கம் தொடர்ந்து உறுதியாகச் செயல்படுவதன் மூலம் அதன்வழி மீட்கப்பட்ட பணத்தை மக்களின் நலனைப் பாதுகாக்க சரியான முறையில் பயன்படுத்த முடியும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

''அமைப்புகளின் விசாரணை முடிவுகள் குறித்து நான் நிச்சயமாக உங்களுக்குத் தெரிவிப்பேன். ஆனால், எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் எந்தவொரு அச்சுறுத்தலையும் நாங்கள் பொறுத்துக்கொள்ளவோ ​​ஏற்றுக்கொள்ளவோ ​​மாட்டோம். நண்பராக இருந்தாலும் சரி எதிரியாக இருந்தாலும் சரி இந்தப் பிரச்சினையை நாங்கள் உறுதியாக எதிர்கொள்வோம் என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்'', என்றார் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.

முன்னதாக அவர் ஜோகூரில் உள்ள இஸ்தானா பாசீர் பெலாங்கிக்குச் சென்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமைச் சந்தித்து நாட்டின் அண்மைய நிலவரங்கள் குறித்து தெரிவித்ததாகக் கூறினார்.

அரசியல்வாதிகள் உயர் பதவியில் உள்ள அரசாங்க அதிகாரிகள் மற்றும் மலேசிய ராணுவப்படை ஆகியோரை உட்படுத்திய ஊழல் தொடர்பான விசாரணைகள் குறித்த அண்மைய தகவல்கள் அதில் அடங்கும்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)