கோத்தா திங்கி, ஜனவரி 02 (பெர்னாமா) -- மலேசிய இராணுவப் படை, ஏ.தி.எம் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களிடையே மேற்கொள்ளப்படும் எந்த வகையான ஊழல் அல்லது அதிகார மீறல் நடவடிக்கைகளிமும் தற்காப்பு அமைச்சு, MINDEF சமரசம் செய்யாது.
ஊழல் தொடர்பான ஒவ்வொரு புகாரையும் தமது தரப்பு தீவிரமாகக் கருதுவதாகவும், சட்ட வழிகள் மற்றும் நடைமுறைகளின்படி விசாரணைகள் நடத்தப்படும் என்றும் தற்காப்பு அமைச்சர், டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் உத்தரவாதம் அளித்திருக்கின்றார்.
"குறிப்பாக தற்காப்பு அமைச்சில் ஏற்படும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் போன்ற எந்தவொரு கூறுகளையும் நாங்கள் மன்னிக்கவில்லை. ஆனால், ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டு தொடர்பான புகார்களும் உள்ளன. உண்மையில் ஆதாரங்களுடன் இல்லாமல் ஒரு குற்றச்சாட்டு வெளியிடப்பட்டதை நான் சமீபத்தில் கண்டேன். இது தொடர்ந்தால், அது மலேசிய இராணுவப் படைகளின் நம்பகத்தன்மையையும் நற்பெயரையும் பாதிக்கும்," என
டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் கூறினார்.
இன்று, ஜோகூர், கோத்தா திங்கியில், கம்போங் மக்கா-னில் மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முஹமட் காலிட் அவ்வாறு கூறினார்.
முன்னதாக, மூத்த ஏ.தி.எம் அதிகாரி ஒருவர் கள்ளப்பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும், 2009-ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டம், செக்ஷன் 17(a)-இன் கீழ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளதாகவும், அரசியல் ஆர்வலர் செகுபாட் என்றழைக்கப்படும் பாட்ருல் ஹிஷாம் ஷாஹரின் குற்றம் சாட்டியிருந்தார்.
அது குறித்து கருத்துரைத்த முஹமட் காலிட், விசாரணைக்கு வழிவிடும் வகையில் அந்த அதிகாரிக்கு விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)